சென்னை: அடுத்த ஆவடி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ராஜ்குமார் ஓராண்டுக்கு முன்பு உறவினர் பெண்ணான பியூலா ராணி (22) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவர்.
திருமணத்துக்கு பிறகும் ராஜ்குமார் தனது தந்தை, தாய், சகோதரர், தங்கையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜ்குமார் வழக்கம் போல் நேற்று வேலைக்கு சென்றதாக கூறப்படும் நிலையில், பியூலா தனது படுக்கை அறையில் இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட அவரது உறவினர் ஒருவர் கத்தி கூச்சலிட்டதை அடுத்து சம்பவம் குறித்து ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கழுத்தில் தழும்பு
சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் விசாரணையை துவக்கிய நிலையில், பியூலா கழுத்தில் தழும்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்டமாக பெண்ணின் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்து, பியூலாவின் கணவர் ராஜ்குமார் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, திருமணம் ஆகி ஓராண்டே ஆவதால் வழக்கு திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் மாற்றப்படவுள்ளது.
இதையும் படிங்க: சேரும், சகதியுமாக தண்டவாளத்தில் துண்டாகி கிடந்த உடல்.. வாணியம்பாடியில் 17 வயது சிறுவன் குரூர மரணம்
இந்நிலையில், பியூலா இறந்ததை அறிந்த அவரது தாய் அண்ணா குமாரி ஆந்திராவிலிருந்து ஆவடி காவல் நிலையத்திற்கு இரவு 2 மணிக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''என் மகள் உயிரிழப்புக்கு காரணமான அவருடைய மாமனார் மற்றும் இரண்டு மகன்களையும் கொல்ல வேண்டும். இல்லையென்றால் நான் இறந்து விடுவேன். நான் ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலை செய்து வருகிறேன். எனக்கு கணவரும் கிடையாது. நான் கண்டிப்பாக இறந்து விடுவேன். எனது மகள் பட்டப் படிப்பு படிக்க நெல்லூரில் படிக்க வைத்தோம். ஆனால், இவர்கள் சென்னைக்கு அழைத்து வந்து ஆசை வார்த்தைகூறி கொடுமைப்படுத்தி சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொண்டார்கள்.
கணவனின் அண்ணன் மீது பாலியல் குற்றசாட்டு
கடைசியாக நான் கடந்த 3 ஆம் தேதி காலை தொலைபேசியில் மகளுடன் பேசிய போது, வீட்டில் சாமி கும்பிடும் பொழுது கணவர் ராஜ்குமாரின் அண்ணன் பிரேம் குமார் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூறினாள். தன்னிடம் மகள் கூறியதான அந்த ஆடியோவை ஆவடி காவல் நிலையத்தில் வைத்து தெலுங்கு மொழியில் செய்தியாளர்களிடம் அண்ணா குமாரி தெரிவித்தார்.
பின்னர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது காவலர்கள் பெண்ணின் தாயிடம் விசாரிக்க வேண்டும் என காவல் நிலையத்தின் உள்ளே அவரை அழைத்துச் சென்றனர். உயிரிழந்த பியூலாவின் பெரியப்பா ஜோசப், தன் மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆவடியில் திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவமும், கணவனின் அண்ணன் மீதான பாலியல் சீண்டல் குற்றச்சாட்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.