சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர்,மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதுதொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,'சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை,நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய #CabinetMeeting-இல் ஒப்புதல் வழங்கியுள்ளோம்!
6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்! உங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன! ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு! என்று முதலமைச்சர் தமது பதிவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு, வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு!
— M.K.Stalin (@mkstalin) February 10, 2025
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர்,
மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர்… pic.twitter.com/a8yo2kzRpM
அப்போது அவர்,"ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் முதலமைச்சர் மிக பெரிய புரட்சியை செய்துள்ளார். சென்னையை சுற்றி உள்ள 4 மாவட்டங்களில் 32 கிலோ மீட்டரில் ஆக்கிரமித்து குடியிருப்பவர்கள் பட்டா பெறாமல் இருப்பதை முதலமைச்சர் அறிந்து அவர்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கில் வசிக்கும் 29,187 பேர் பயன் பெற உள்ளனர். சென்னை மாநகராட்சியை தவிர்த்து மற்ற இடங்களில் வசிக்கும் 86,000 பேர் பட்டா பெற்று பயனடைய உள்ளனர்.1962-ல் இருந்து இன்று வரை தீர்க்கப்படாமல் இருந்த பட்டா பிரச்சனைக்கு இன்று தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 10 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 6 மாதங்களில் 6 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க திட்டமிட்டுள்ளோம். நீர்நிலை புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க முடியாது. எந்தவொரு தனி மனிதனுக்கும் வீடு இல்லை என்கிற சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்கிற நிலை வர வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்காக மாவட்ட அளவில் ஒரு குழுவும், மாநில அளவில் ஒரு குழுவும் அமைக்கப்பட உள்ளது." என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்