குடியாத்தம்: இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் நம்பி விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கலைக் கல்லூரியில் முன்னாள் எம்பி டி.ராஜா நிதியிலிருந்து கட்டப்பட்ட டாக்டர் அம்பேத்கர் பன்னோக்கு கருத்தரங்க கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டி.ராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு, இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் போனது தான். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தலுக்கு பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை கூறி வருகிறது. இந்திய கூட்டணி சார்ந்த கட்சிகள் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
அவர்கள் இந்த தேர்தல் முடிவுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். இந்தியா கூட்டணியை சேர்ந்த மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒருவரை ஒருவர் நம்பி செயல்பட வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும். இதற்கு ஒரே காரணம் இந்த கட்சிகள் இலக்கு என்பது பாரதிய ஜனதா கட்சியை தோற்கடித்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும், இந்திய அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பது தான்.
இப்படி ஒற்றுமை இல்லாமல் போனால் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதாயமாகிறது. அது தான் டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் நடந்துள்ளது. இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லாமல் போனதாலே டெல்லியில் பாஜக வெற்றி பெற்றது. கொள்கை ரீதியாக மோதாமல் தனிநபர் தாக்குதலாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால், பாஜக வெற்றி பெற்றதே தவிர அந்த கட்சிக்கு கொள்கைரீதியாக மக்கள் ஆதரவு அளிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியினர் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இன்றைக்கு தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிற புரிதல் அவர் காட்டுகின்ற அரசியல் முதிர்ச்சியை பலரும் இன்று எடுத்துக் கொள்ள வேண்டும். அவருடைய தலைமையில் இங்கே எப்படி அணி சேர்க்கை உருவானது? எந்த பிரச்னையும் இல்லாமல் எப்படி தொகுதி உடன்பாடு கையெழுத்தானது? மக்களவைத் தேர்தலில் அதனால் 40- 40 வெற்றி பெற்றதை புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணியைப் பார்த்து புரிதல் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு டி.ராஜா கூறினார்.