சென்னை:என்ன செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியலையே என்று புலம்புவோருக்கு மத்தியில், எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருக்கிறேன், உடம்பு ஏறவில்லையே என்று ஏங்குபவர்களும் உண்டு. உங்கள் உடல் எடையை அதிகரிப்பது அல்லது உடலில் தசை அடர்த்தியை அதிகரிப்பது ஒன்றும் உடல் எடையைக் குறைப்பது போல எளிதான காரியம் கிடையாது.
என்ன தான் சாப்பிட்டாலும் சிலர் மரபு(ஜீன்) காரணமாக ஒல்லியாகவே இருப்பார்கள். வளர்சிதை மாற்றத்தின்படி, அவர்கள் உட்கொள்வதைத் காட்டிலும் அதிகமான எனர்ஜி வெளியேறிக்கொண்டிருக்கும். இதனால், என்ன சாப்பிட்டாலும் சிலருக்கு வெயிட் அதிகரிக்காது.
இப்படியான சூழலில் தான் நீங்கள் கூடுதலாகவும் பொறுமையாகவும் சற்று அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஆரோக்கியமாகச் சாப்பிட்டாலும், ஜங்க் ஃபுட் சாப்பிட்டாலும் வெயிட் அதிகரிக்கப் போவது இல்லை என நினைத்து ஜங்க் ஃபுட்-ஐ நோக்கி ஒரு குழு படையெடுக்க ஆரம்பிக்கும். அது தான் தவறான செயல் என்கிறது அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஏஜிங் (National Institute Of Aging) என்கிற மருத்துவ ஆய்வு.
இயற்கையாக, ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க என்ன செய்யலாம்:பட்டர் ஃபுரூட் (Avacado), பீனட் பட்டர் (Peanut Butter) போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட உணவுகளைத் தினமும் எடுத்துக்கொள்ளலாம்.
வாழைப்பழம்:வாழைப்பழத்தில் அதிகமான சத்துக்களும் கார்போஹைட்ரேட் அடங்கி இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு வாழைப்பழம் வரப்பிரசாதமாக அமைகிறது. தினமும் காலையில் பால் அல்லது தயிருடன் வாழைப்பழத்தைச் சாப்பிட வேண்டும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வாழைப்பழம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் மருத்துவர் ஹான்சாஜீ யோகெண்ட்ரா.