சென்னை: சர்வதேச அளவில் 124 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் உடல் பருமனால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவிலும் உடல் பருமன் கொண்ட குழந்தைகளை பார்க்க முடிகிறது. அதிகமான எடை குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
ஆகவே அதை கருத்தில் கொண்டு, குழந்தைகளின் உடல் எடையை கவனத்தில் கொள்வது பெற்றோரின் கடமை. “நல்லா சாப்பிடு, சாப்பிடுனு சொல்லிட்டு, இப்போ எப்படி சாப்பிடாதே என்று சொல்ல முடியும்” என பெற்றோர்கள் குழம்பி இருப்பதையும் பார்க்க முடிகிறது. “என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் அதை எப்படி கொண்டு வருவது என்று தான் விளங்கவில்லை” என புலம்பும் பெற்றோர்களுக்காக யுனிசெஃப் அமைப்பு (United Nations Children's Fund) வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
பழி போடாதீர்கள்:அதிகப்படியான உணவு மட்டும் உடல் எடைக்கு காரணம் என பெற்றோர்கள் கருதுவது தவறு. மரபணு, குழந்தைகளின் நடத்தை, சுற்றுச்சூழல் போன்றவையும் உடல் எடை அதிகரிப்பிற்கு காரணமாக அமையலாம். பொதுவாகவே அதிக எடையுடன் இருக்கும் குழந்தைகளுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை இருக்கலாம். அவர்கள் பள்ளியிலும், வெளியிலும் பல்வேறு கேலி கிண்டலுக்கு உள்ளாகின்றனர்.
ஆகவே அவர்களிடம் பேசும் போது, அவர்களை கிண்டல் செய்யாமல், அவர்கள் மீது பழி போடாமல் பேச வேண்டும். பெற்றோர்கள் தங்களை கேலி செய்வதையும், பழி போவதையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் குழந்தைகள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகவும் நேரிடலாம். இது மட்டுமில்லாமல் குழந்தைகள் மன அழுத்தம், சலிப்பு, கவலையாக உணரும் போது, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ண வாய்ப்புள்ளது.
உத்தரவிடாதீர்கள்:பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்பதை எனது கவலைகளை போக்கவும், எனது பிரச்சினைகளை சரி செய்யவும் எனக்காக என் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என குழந்தைகள் நினைக்க வேண்டும். அதற்கேற்றார் போல் பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும். எப்போதும் உங்களது குழந்தைகளை இழிவுபடுத்தும் விதமாக பேசக்கூடாது. முக்கியமாக குழந்தைகள் முன்னிலையில், கணவனை மனைவியும், மனைவியை கணவனும் குறை கூறுவதையும், அவர்களது உடல் எடை குறித்து கேலி செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
அவர்களது உடல் எடை குறித்து கேலி செய்வதையும், அவர்கள் முன்னிலையில் வேறு சிலரை கேலி செய்வதையும் தவிர்க்க வேண்டும். இது போன்ற செயலால், குழந்தைகள் உங்களிடம் மனம் திறந்து பேசுவதை விரும்ப மாட்டார்கள். உங்கள் குழந்தை உங்களிடம் தனது உடல் எடையை நினைத்து கவலைப்படுவதாக தெரிவித்தால், அதனை கண்டுகொள்ளாமல் இருந்து விடாதீர்கள். அவர்களுக்கு ஆதரவாக பேசுங்கள்.