நியூ ஓர்லியன்ஸ்(அமெரிக்கா): தாக்குதலை மேற்கொள்ளும் சில மணி நேரத்துக்கு முன்பு ஐஎஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு கொலை செய்யும் நோக்கத்தை கொண்டிருப்பதாக சமூக ஊடகத்தில் தீவிரவாதி தமது எண்ணத்தை வெளிப்படுத்தியதை எஃபிஐ கண்டறிந்திருப்பதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், தாக்குதல் மேற்கொண்ட வாகனத்தில் ஐஎஸ் இயக்கத்தின் கொடி இருந்ததையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். போலீசாரின் பதிலடி தாக்குதலில் தீவிரவாதி உயிரிழந்த நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிலருக்கு தொடர்பு: நியூ ஓர்லியன்ஸ் தாக்குதல் குறித்து பேசிய எஃபிஐ அதிகாரிகள்,"புதன் கிழமை அதிகாலை நடந்த தாக்குதலை தீவிரவாத தாக்குதல் செயல் என்ற ரீதியில் புலனாய்வு செய்து வருகின்றோம். இந்த தாக்குதலின் பின்னணியில் வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் மட்டுமின்றி மேலும் சிலரும் இருக்கலாம். தாக்குதல் நடத்திய நபரிடம் இருந்து துப்பாக்கி, மற்றும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன,"என்று கூறியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேட்டி அளித்துள்ள அதிபர் ஜோ பைடன், "தாக்குதலுக்கு முன்பு தீவிரவாதி வெளியிட்ட சமூக ஊடக வீடியோவை எஃபிஐ போலீசார் கண்டறிந்துள்ளனர்.ஐஎஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு கொலை செய்யும் நோக்கத்துடன் இருந்ததாக அந்த வீடியோவில் தீவிரவாதி கூறியுள்ளார்,"என்றார்.
திரைப்பட காட்சி போல தாக்குதல்: புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் இருந்த போர்பன் தெரு, இந்த தாக்குதலுக்கு பின்னர் காயமுற்றோரின் கதறல்களை கொண்டிருந்தது. ரத்தம் தோய்ந்த உடல்கள் சிதறி கிடந்தன. வாகனம் வேகமாக வருவதைக் கண்ட பலர் அருகில் இருந்த இரவு விடுதிகள்,ஹோட்டல்களுக்குள் நுழைந்தனர். 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமுற்றுள்ளனர். அருகில் உள்ள சூப்பர்டோம் பகுதியில் நடைபெற இருந்த கால்பந்து விளையாட்டு போட்டிகள் இன்று வரை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த மிசிசிப்பி மாகாணத்தின் கல்ப்போர்ட் பகுதியை சேர்ந்த ஜியோன் பார்சன்ஸ், "திரைப்படங்களில் வரும் காட்சி போல லாரியில் மோதி மக்களின் உடல்கள் தூக்கிய எறியப்பட்டன. தெரு முழுவதும் பாதிக்கப்பட்டோர் உடல்கள் கிடந்தன. பாதிக்கப்பட்டோர் அழுது கொண்டே இருந்தனர்,"என்றார். ஜியோன் பார்சன்ஸின் நண்பர் நிக்கிரா டெடாக்ஸ் என்பவரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
தீவிரவாதி சுட்டுக்கொலை: தாக்குதல் குறித்து பேட்டியளித்துள்ள காவல்துறை உயர் அதிகாரி அன்னே கிர்க்பாட்ரிக்,"இது தீவிரவாத தாக்குதல் மட்டுமின்றி தீமை விளைவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட தாக்குதலாகும். நடைபாதை வாசிகளை பாதுகாக்க வைத்திருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு அவர்கள் மீது தீவிரவாதி வாகனத்தை மோதியுள்ளார். தீவிரமான கொல்லும் நோக்கத்துடன் வாகனத்தை இயக்கியுள்ளார்,"என்றார். தாக்குதல் நடத்தியவரின் பெயர் ஷம்சுத்-தின் ஜப்பார் என்றும், 42 வயதான இந்த நபர் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய எஃபிஐ உதவி சிறப்பு ஏஜென்ட் அலேத்தியா டங்கன்,"ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படக் கூடிய இரண்டு பைப் வெடிகுண்டுகள், பல்வேறு வெடிகுண்டுகளை புலனாய்வாளர்கள் கைப்பற்றி உள்ளனர்,"என்று தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், மூன்று ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் வெடி குண்டு ஒன்றை அந்த பகுதியில் வைத்ததாக தெரியவந்துள்ளது. ஆனால், அவர்கள் யார் என்று இதுவரை கண்டறியப்படவில்லை. அவர்களுக்கும் தாக்குதலுக்கும் தொடர்பிருக்கிறதா என்றும் தெரியவில்லை என்று போலீசார் கூறினர்.
தாக்குதல் நடத்திய ஷம்சுத்-தின் ஜப்பார், தமது வாகனத்தை பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் வேகமாக ஓட்டிச் சென்றதுடன், வாகனங்கள் போக்குவரத்தை தடுக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தை சுற்றி வாகனத்தை ஓட்டி சென்றதாகவும் போலீசார் கூறினர். தாக்குதல் நடத்திய பின்னர் வாகனத்தை நிறுத்தி வெளியேறிய ஷம்சுத்-தின் ஜப்பாரை அங்கிருந்த போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது அங்கிருந்த போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் உயிரிழந்தார்.