சென்னை: சென்னையில் போதைப்பொருளை முழுமையாக ஒழிப்பதற்கு போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு என்ற தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து சிறையில் அடைத்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை அரும்பாக்கம் பகுதியில் கடந்த மாதம் போதைப்பொருள் விற்பனை செய்த ஐந்து பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவர்களது செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்திகளை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக வியாசர்பாடியைச் சேர்ந்த ரவி, கணேஷ், திருவள்ளூரைச் சேர்ந்த மதன் ஆகிய மூன்று பேரை நேற்று (ஐனவரி 1) புதன்கிழமை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், "இவர்கள் சூடோபெட்ரின் என்ற ஒரு வகை போதை பொருளை வைத்து மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், இந்த வகை போதைப்பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை புத்தாண்டு கொண்டாட்டம்: அதிவேகமாக பறந்த 242 பைக்குகள் பறிமுதல்! சாலை விபத்துகளில் ஐவர் பலி
இதையடுத்து, மூன்று பேரிடம் இருந்து 39.01 கிலோ போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப் பொருட்களான மற்றும் ரொக்கம் ரூ.51 லட்சம், சுமார் 105 கிராம் தங்க நகைகள், 5 செல்போன்கள், 2 பாஸ்போர்ட்கள் 2 எடை மெஷின்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்கள் போதைப்பொருள் தயாரிப்பை எங்கே வைத்து நடத்தி உள்ளனர், எங்கெல்லாம் இவர்கள் விற்பனை செய்து உள்ளார்கள்? யாரெல்லாம் இவர்களுடன் தொடர்பில் உள்ளார்கள்? என தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.