உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்கள் பொதுவாக 'பெப்டிக் அல்சர்' (Peptic ulcer) எனப்படுகிறது. இதுவே, இரைப்பையில் புண் ஏற்பட்டால் அது 'கேஸ்ட்ரிக் அல்சர்' (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் அவை 'டியோடினல் அல்சர்' (Duodenal ulcer) என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில், அல்சர் வருவதற்கான காரணங்கள், அறிகுறிகளை மற்றும் குணமாக்கும் வழிமுறை என்னென்ன என்பதை காணலாம்.
காரணங்கள்:
- புளிப்பு, மசாலா, காரம் நிறைந்த உணவுகள் அதிகம் சாப்பிடுவது
- மது அருந்துதல், புகை பிடித்தல்
- டீ, காபி அதிகமாக குடிப்பது
- வலிநிவாரணி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவது
- சுடச் சுட உணவை சாப்பிடுவது, பட்டினி கிடப்பது
அல்சர் அறிகுறிகள்: வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், வயிறு வலி, எப்போதும் வயிறு நிறைந்த உணர்வு, போன்றவைகளும், தீவிர அல்சர் பிரச்சனை ஏற்பட்டால் வாந்தி, இரத்த வாந்தி, உடல் எடையிழப்பு, மயக்கம், சோர்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்.
என்ன சாப்பிடலாம்?: வயிற்றுபுண், அல்சர் பிரச்சனை குணமாக காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி உணவில் பூசணிக்காய், சுரைக்காய், பாகற்காய், கோவக்காய், முள்ளங்கி, புடலங்காய் என எதாவது ஒரு காய்கறி உணவில் கட்டாயமாக இருக்க வேண்டும். இந்த காய்கறிகளை பொரித்தோ அல்லது அதிக மசாலாக்களை சேர்த்து செய்யாமல், வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி சாப்பிடுவதால், வயிற்றுப்புண் குறையும்.
எந்த பழம் சிறந்தது?: காய்கறிகளை போல அதிக நார்ச்சத்து உள்ள பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும், புளிப்பு சுவை இல்லாத பழங்களை சாப்பிட வேண்டும். தர்பூசணி, கொய்யாப்பழம், வாழைப்பழம் போன்றவற்றை தினசரி 100 கிராம் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.
தயிர் மற்றும் அசைவம் சாப்பிடலாமா?: வயிற்றுப்புண்ணுக்கு சிறந்த மருந்தாக இருப்பது தயிர் தான். தயிரில் உள்ள புரோபயாட்டிக் வயிற்றுப்புண்கள் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். அந்த வகையில், அல்சர், வயிற்றுப்புண் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினசரி 1 கப் தயிர் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. புரதம் நிறைந்த அசைவ உணவுகளான கோழி மற்றும் மீன் சாப்பிடலாம். ஆனால், அதிக எண்ணெய், காரம் சேர்க்காமல், ஆரோக்கியமான முறையில் சாப்பிட வேண்டும்.
அல்சர் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை: அதிக காரம், பொரித்த உணவுகள், தேன், புளி, அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். காலை உணவை தவிர்க்கக் கூடாது. தினசரி 2 லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்கி எழுவதும், உண்பதும் மிகவும் அவசியம். கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, மாதுளைப்பழம், நுங்கு போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: இந்த 5 அறிகுறிகள் இருந்தால்..புற்றுநோய்க்கான அபாயம் என அர்த்தம்! - CANCER SYMPTOMS BEFORE DIAGNOSIS
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.