சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் செல்போனை கைப்பற்றியுள்ள சிறப்பு புலனாய்வு குழுவினர், மொபைலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை வேறு யாருக்கவது பகிர்ந்துள்ளாரா என்ற கோணத்தில் அவரது வாட்ஸ்ஆப் சாட் மற்றும் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான செய்தி வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மாணவியின் எப்.ஐ.ஆர் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புலனாய்வுக் குழு விசாரணை
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பெயரில், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு மற்றும் இந்த வழக்கு குறித்தான முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நேற்று (ஜனவரி 2) வியாழக்கிழமை காலை சம்பவம் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு, நேரடியாகச் சென்று சம்பவம் நடந்த இடம், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தினர்.
ஆபாச வீடியோக்கள் பறிமுதல்
முன்னதாக குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டபோது செல்போனை முழுவதுமாக பரிசோதனை செய்ய சைபர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அப்போது சைபர் கிரைம் போலீசார் ஞானசேகரன் செல்போனில் பல்வேறு ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் ஞானசேகரன் செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்களை வேறு யாருக்காவது பகிர்ந்து உள்ளாரா? என்ற கோணத்தில் அவரது செல்போனை கைப்பற்றி வாட்ஸ்ஆப் சாட் மற்றும் அவரது செல்போனில் உள்ள இரண்டு சிம்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட அழைப்புகளை சிறப்புப் புலனாய்வு அலுவலர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மணிப்பூரை விடுங்க.. கனிமொழி இதுக்கு பதில் சொல்லணும் - பாஜக மகளிரணியினர் ஆவேசம்..!
மேலும், இந்த வழக்கில் கசிந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக சொல்லப்படும் 'அந்த சார்' யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதுதொடர்பாக ஞானசேகரனின் மொபைல் அழைப்புகளில் யார் பெயராவது கிடைக்குமா என்ற தொனியிலும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலர்கள் ஆய்வு செய்து வருவதாகத் தெரிகிறது.
இரு சிம் கார்டுகள்
முன்னதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், செல்போனை பிளைட் மோடில் வைத்துக் கொண்டு, மாணவியை மிரட்டுவதற்காக அதுபோன்று பேசியதாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனாலும், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஞானசேகரின் செல்போனை பறிமுதல் செய்து அதில் உள்ள ஆபாச வீடியோக்கள் யாருக்கெல்லாம் பகிரப்பட்டுள்ளது, மாணவியை மிரட்டும் பொழுது யாரிடமாவது போன் செய்து பேசியுள்ளாரா? போன்ற விவரங்களை சேகரிக்க, அவரது மொபைல் போனின் இரு சிம் கார்டுகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்ட அழைப்புகளை, சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.