மதுரை: அமைச்சர் மூர்த்தி மதுரையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் சாதி ரீதியாக பேசியது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் என்பவர் அனைத்து சமூகத்திற்கும் பொதுவானவர். நான் பேசிய வீடியோவை முழுவதும் வெளியிடாமல் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் வெட்டி பரப்புகின்றனர் என்று அமைச்சர் மூர்த்தி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர், தனியார் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மாணவிகளுக்கான பாராட்டு விழாவில் பேசிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, "நான் சொல்கிறேன் ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது நான்கு பேர் இறந்து போனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. ஆனால், சுதந்திரத்திற்காக நமது சமூகத்தினர் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை உயிர் தியாகம் செய்துள்ளனர் என்ற வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும்.
நாயக்கர்கள் காலத்தில் கள்ளழகர் கோயில் மற்றும் திருமோகூர் கோயில்களில் கொள்ளையடித்துச் செல்லும் பொழுது, இந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான் முன்களத்தில் நின்று ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் உசிலம்பட்டி அருகே 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். விவசாயத்தில் முன்னேறி இருந்தபோதும், படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினால் நமது வரலாறு வெளிக்கொண்டு வரப்படாமல் பின் தங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது அந்த நிலை மாறி வருகிறது," என்று வெளியான வீடியோவில் பேசியிருக்கிறார்.
வீடியோ வைரல்:
அவர், பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் சாதி ரீதியான பேச்சுக்கு பலரும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இத்தைகைய சர்ச்சைக்கு அமைச்சர் மூர்த்தி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு திருவிழா ஜனவரி 14ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு இன்று (டிசம்பர் 02) வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டுள்ளார்.
அமைச்சர் விளக்கம்:
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, "சமூக வலைதளங்களில் நான் பேசியதாக தற்போது பரப்பப்பட்டு வரும் குறிப்பிட்ட வீடியோ உள்நோக்கம் கொண்டது. அதில், குறிப்பிட்ட சமூகத்தினர் அனைத்து சமூகத்தினரோடும் நல்லிணக்கத்தோடு உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனும் பொருள்பட பேசியுள்ளேன்.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் அக்குறிப்பபிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் வெற்றி பெற்று பணியில் சேரக்கூடிய நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தேன். அந்த மாணவர்கள் பிற சமூகத்தினரோடு நல்லிணக்கத்துடன் பணிபுரிய வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினேன். அவற்றையெல்லாம் குறிப்பிடாது வீடியோவை பரப்பி வருகிறார்கள்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதா? - தமிழக அரசை வன்மையாக கண்டிக்கும் திமுக கூட்டணிக் கட்சிகள்!
அந்தப் பேச்சு குறித்த வீடியோவை முழுவதும் வெளியிடாமல் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் வெட்டி பரப்புகின்றனர். இது குறித்து நான் எந்தவித பதிலும் அளிக்க விரும்பவில்லை. எனக்கு யாரோடும் எந்த முரண்பாடும் கிடையாது. இதனை யார் பரப்பினார்கள் என்பதை ஊடகங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும். அமைச்சர் என்பவர் அனைத்து சமூகத்திற்கும் பொதுவானவர். இங்கு ஒரு சார்பு நிலையோடு யாரும் இயங்க முடியாது," என்று விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக இந்த சர்ச்சை வீடியோ குறித்து நம்மிடம் பேசிய விழா ஏற்பாட்டாளர்கள், "ஏறக்குறைய 10 நிமிடங்களுக்கு மேலாக அமைச்சர் மூர்த்தி பேசிய முழு பேச்சில், பல்வேறு சமுதாயங்களோடும், நல்லுறவோடும் நாம் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்பது பற்றி நல்லிணக்கத்தோடு பேசினார். ஆனால், அவர் பேசிய மற்றவற்றை தவிர்த்துவிட்டு, குறிப்பிட்ட அந்தப் பேச்சுகளை மட்டும் தற்போது வைரலாக்கி வருகின்றனர். இது வேதனை அளிக்கிறது," என்று தெரிவித்தனர்.