செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 51). இவரது மனைவி சசிகலா வயது (44). இருவரும் தாம்பரத்தில் உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர்.
கூடுவாஞ்சேரி அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது, சென்னை மார்க்கமாக லோடு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் மற்றும் சம்பத் - சசிகலா தம்பதியினர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
அதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், சசிகலா லாரியின் சக்கரத்தில் சிக்கியுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சசிகலா மீது ஏறி இறங்கியதில் கணவர் கண்முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். பின்னர், இந்த விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் சசிகலாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி! லாவகமாக மீட்ட ரயில்வே தலைமைக் காவலர்!
அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கருப்பசாமி (வயது 20) என்பவரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தின் நெஞ்சைப் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.