சென்னை: சென்னையில் இன்று காலை முதல் சாலையில் வாகனங்களே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், சென்னை விமான நிலைய பகுதியிலும் இன்று (பிப்.4) காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனையடுத்து லண்டனில் இருந்து 317 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மற்றும் மஸ்கட்டில் இருந்து 252 பயணிகளுடன் சென்னைக்கு வந்த ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஹைதராபாத்தில் இருந்து 162 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் புனேவில் இருந்து 152 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் திருவனந்தபுரத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
குவைத்தில் இருந்து 148 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உட்பட சில விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் தொடர்ந்து வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. அதேபோல், சென்னையில் இருந்து டெல்லி, மதுரை, கோவை, தூத்துக்குடி, விஜயவாடா, அந்தமான், லண்டன், சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய 25க்கும் மேற்பட்ட விமானங்கள், தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பனி மூட்டம் காரணமாக சுமார் 40க்கும் மேற்பட்ட வருகை, புறப்பாடு விமானங்கள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இந்த பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 5.30 மணியிலிருந்து காலை 9 மணி வரையில், சுமார் 40க்கும் மேற்பட்ட வருகை புறப்பாடு விமானங்கள், இரண்டு மணி நேரத்தில் இருந்து, 5 மணி நேரம் வரை தாமதமாகி, ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிக்னலில் நின்று கொண்டிருந்த பைக் மீது மோதிய லாரி.. கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சோகம்! - CHENGALPATTU BIKE ACCIDENT
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "பயணிகள் மற்றும் விமான பாதுகாப்பு நலன் கருதியே, விமான சேவைகள் தாமதம் மற்றும் அருகிலுள்ள வேறு விமான நிலையங்களுக்கு சென்று தரையிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது" எனத் தெரிவித்துள்ளனர்.