விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகன் உதயகுமார் (30). இவர் கோயம்புத்தூரில் பொறியியல் பட்டப் படிப்பு முடித்துவிட்டு, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் உயர் படிப்புக்காக ஸ்லோவாக்கியா நாட்டுக்குச் சென்றார்.
அங்கு இரண்டாண்டுகள் மேல் படிப்பை முடித்துவிட்டு, பிரபல நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், பணிக்குச் சென்ற நிறுவனத்தில் உக்ரைன் நாட்டுப் பெண்ணான அனஸ்டாசியா என்பவருடன் இவருக்கு காதல் மலர்ந்துள்ளது. பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் இரு வீட்டார் தரப்பிலும் சம்மதம் தெரிவித்த நிலையில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொள்ளக் கடந்த 30ஆம் தேதி அந்நாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், இவர்களுக்கு நேற்று (பிப்.3) காலை, விழுப்புரம் அருகே கப்பியாம்புலியூர் பெருமாள் கோயிலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. மணப்பெண் தமிழ்நாட்டு கலாச்சாரப்படி சேலை அணிந்து பாரம்பரிய முறைப்படி திருமணக் கோலத்திலும் மாப்பிள்ளையும் தமிழர் முறைப்படி தயாராகி இனிதே திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து மணமகன் உதயக்குமார் கூறுகையில், “2 வருடங்களாக நாங்கள் காதலித்து வந்தோம். நமது தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய விரும்பினோம். அனஸ்டாசியா உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் எனது மனைவி அனஸ்டாசியா தாய் மற்றும் உறவினர்களுடன் வெளியேறி ஸ்லோவாக்கியாவில் வேலை செய்து வருகிறார்” என்றார்,
இதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனக்காவூரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆதிரை மற்றும் 2 மகன்களுடன் டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: அழகர் கோயில் ஊழியர்களுக்கான குடியிருப்பு வழக்கு: வனத்துறை பதிலளிக்க உத்தரவு!
இவரது மூத்த மகன் அவினாஷ், நாசாவில் அறிவியல் ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த கேத்தரின் ஓசேவி என்பவரைக் காதலித்துள்ளார். இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள குலதெய்வ கோயிலான ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் நடந்தது. தமிழ் கலாச்சார முறைப்படி பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு மற்றும் மணிமேடையில் புரோகிதர் வேத மந்திரங்கள் ஓத நாதஸ்வர இசையுடன் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.