கோயம்புத்தூர்: கோவையில் வடமாநில தொழிலாளர்களை அடித்து வழிப்பறி செய்த பணத்தை காதலிக்கு அனுப்பி வைத்த இளைஞர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராகேஷ், சஞ்சய், ராஜேஷ், நிஷாந்த், சுபாஷ் ஆகியோர் கோவை அன்னூரை அடுத்த மாசாண்டிபாளையத்தில் உள்ள தொழிற்சாலையில் வெல்டிங் ஆபரேட்டராக கடந்த ஏழு வருடமாக பணிபுரிந்து வருகின்றனர்.
ஜிபே மூலம் வழிப்பறி
இந்நிலையில் இவர்கள் கடந்த 1ம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு தங்களது பணியை முடித்து விட்டு, கெம்மநாயக்கன்பாளையம் பகுதி, பாலாஜி நகரில் உள்ள தங்களது குடியிருப்பு பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஐந்து பேர்கொண்ட கும்பல் இவர்களை வழிமறித்து தாக்கியுள்ளனர். அப்போது உங்களிடம் கஞ்சா உள்ளதா? பணம் உள்ளதா? என கேட்டு கத்தி மற்றும் உடைந்த பீர் பாட்டிலை கழுத்தில் வைத்து வட மாநிலத்தவர்களை மிரட்டி அவர்களது உடைமைகளை சோதித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கையில் இருந்த மூன்று செல்போன்களையும் பறித்தனர். பின்னர் அனைவரையும் தங்களது செல்போன் பாஸ்வேர்டை கொண்டு அவரவர் செல்போன்களை திறக்கக் கோரி மிரட்டி, அதில் உள்ள ஜிபே (g pay) நம்பரை எடுத்து அதன் பாஸ்வேர்டைக்க கேட்டு மிரட்டி உள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கி குண்டுகள்... போலீசார் விசாரணை!
இதற்கு எதுவும் எங்களுக்கு தெரியாது என வட மாநிலத்தவர் கூறியுள்ளனர். இதனால் அவர்களை மீண்டும் சராமாரியாக ஆயுதங்கள் கொண்டு தாக்கி, உதைத்து துன்புறுத்தி உள்ளனர். இதனையடுத்து சுபாஷின் செல்போனில் இருந்த ஜிபே- வில் இருந்த 25 ஆயிரத்தை, கமலேஷ் (21) தனது ஜிபே- விற்கு மாற்றியுள்ளார். அதன் பிறகு மீண்டும் ஏ.டி.எம் கார்டுகள் ஏதாவது உங்களது வீட்டில் உள்ளதா? அதை எடுத்துவர கோரி அதிகாலை 4 மணி முதல் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
ஆட்களை கண்டதும் தப்பிய கும்பல்
மேலும், வடமாநிலத்தவர்களில் ஒருவரை மட்டும் தங்களது குடியிருப்பில் உள்ள ஏ.டி.எம். கார்டுகளை எடுத்து வர கூறியுள்ளனர். அப்போது அங்கே சென்ற நபர் தங்களுடன் பணிபுரியும் ரமேஷ், சாமியப்பன், ராஜேந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சக பணியாளர்கள் மூன்று பேரை கண்டதும், திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பி தலை மறைவாகினர்.
இதனை அடுத்து அன்னூர் காவல் நிலையத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ்(39) புகார் அளித்தார். இதை அடுத்து அன்னூர் இன்ஸ்பெக்டர் செல்வம் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் அப்பகுதியை சேர்ந்த கமலேஷ் (21), பூபதி (22), சந்தோஷ் (22), லோகேஷ் (25), விஜய் (22) ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து நகை பறிப்பு... இரண்டு பெண்கள் கைது!
இதனை அடுத்து அன்னூர் போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கமலேஷ், பூபதி, சந்தோஷ் ஆகியோர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு, அடிதடி வழக்குகள் காரமடை, சரவணம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.
காதலிக்கு ஜிபே
மேலும், வழிப்பறிக் கொள்ளை சம்பவம் நடந்த மசாண்டிபாளையம் பகுதியில் உள்ள முட்புதரில் மூன்று செல்போன்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இந்த செல்போன்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கமலேஷ் தனது ஜிபே-வில் மிரட்டி பறித்த பணத்தை, தஞ்சாவூரில் உள்ள தனது காதலிக்கு மாற்றி உள்ளது தெரிய வந்தது. மேலும் இவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கமலேஷின் காதலியிடம் இருந்த 25,000 ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து வழிப்பறி கொள்ளைக்கு ஈடுபடுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்த ஐந்து பேரையும் அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர். குற்றம் நடந்த 24 மணி நேரத்தில் போலீசார் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.