தூத்துக்குடி: நம் நாடு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூர கடற்கரையை கொண்டுள்ளது. இதில் தமிழ்நாடு, மும்பை, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான மீனவர்கள் கடலை நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
கடல் உணவு பொருட்கள் ஆண்டுக்கு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நமது நாட்டிற்கு மீன் உணவு ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கவும், மீன்வளத்தை பெருக்கவும், மீனவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்தின் 78-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு இன்று (பிப்.4) கடல்வாழ் உயிரினங்கள் கண்காட்சி நடைபெற்றது.
இதையும் படிங்க: மத நல்லிணக்கத்திற்கான அடையாளம் நிறைந்த தலமே திருப்பரங்குன்றம்! தொல்லியல் ஆய்வாளர் பாலமுரளி பிரத்யேக பேட்டி!
இறால் குஞ்சு பொரித்தல்
இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், கடல் பகுதியில் உள்ள முத்து, சங்கு வளம், முத்து வளர்ப்பு, முத்து சிற்பிகள், மீன், இறால் குஞ்சு பொரித்தல், மீன்களின் இனப்பெருக்கம், உண்ணக்கூடிய மீன், அரிதான மீன், மீன்களின் வண்ணங்கள் அவற்றின் இயல்புகள் குறித்த விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டன.
மேலும், இந்த கண்காட்சியில் திசுவளர்ப்பு முறையில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கடல் முத்துகள் பற்றிய விளக்கம், ஆழி வளர்ப்பு பற்றிய விளக்கம், அரிய வகையான மீன்கள், சிங்கி இறால், நண்டுகள், சுறா வகை மீன்கள், அலங்கார மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் இடம் பெற்று இருந்தன.
பவள பாறைகள்
இந்த கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பார்த்து சென்றனர். கண்காட்சியில் மீன்கள் மட்டும் இல்லாமல் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவுகள் பற்றியும், இந்த தீவு பகுதியில் உள்ள பவள பாறைகள், கடல்பாசி, கடல்விசிறி, சங்கு இனங்களும் இடம்பெற்று இருந்தன. இதுகுறித்து பார்வையாளர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.