புதுடெல்லி: 2024ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 728 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக இன்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு சிவில் விமானப்போக்குவரத்துறை அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், "2024ஆம் ஆண்டு 728 பயணிகள் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இவற்றில் 714 உள்நாட்டு விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகபட்சமாக 216 இன்டிகோ விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. ஏர் இந்தியாவுக்கு 179 வெடிகுண்டு மிரட்டல்களும், விஸ்தாராவுக்கு 153 மிரட்டல்களும், ஆகாசா ஏர் நிறுவனத்தின் விமானங்களுக்கு 72 மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர ஸ்பைஸ் ஜெட், அலையன்ஸ் ஏர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்டார் ஏர் நிறுவனங்களுக்கு முறையே 35,26,19, 14 மிரட்டல்களும் வந்துள்ளன. வெளிநாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களுக்கும் மிரட்டல்கள் வந்துள்ளன. குறிப்பாக எமிரேட்ஸ் நிறுவன விமானங்களுக்கு 5 மிரட்டலகளும், ஏர் அரேபியா நிறுவனத்துக்கு மூன்று மிரட்டல்களும், ஏரோஃபிளோட், ஏர் கனடா, கதே பசுபிக், எடிஹேட், நோக் ஏர், தாய் லயன் ஏர் ஆகிய நிறுவனங்களுக்கு தலா ஒரு வெடிகுண்டு மிரட்டல்களும் வந்துள்ளன.
இதையும் படிங்க: மத நல்லிணக்கத்திற்கான அடையாளம் நிறைந்த தலமே திருப்பரங்குன்றம்! தொல்லியல் ஆய்வாளர் பாலமுரளி பிரத்யேக பேட்டி!
இது போன்ற விமான நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளின் அடிப்படையில் பொது விமானப்போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் மூலம் கையாளப்படுகின்றன. வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீடு கமிட்டி வெடிகுண்டு மிரட்டல் அவசர திட்டம் உள்ளிட்டவை ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஒவ்வொரு நிகழ்வையும் முறையாக எதிர்கொள்ள அமல்படுத்தப்படுகிறது,"என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிமல் நத்வானி என்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பொது விமானப்போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் தரவுகளை வெளியிட்ட மத்திய விமானப்போக்குவரத்துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல், "2024ஆம் ஆண்டு பல்வறு விமான நிலையங்களுக்கு 728 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,"என தெரிவித்துள்ளார். பொது விமானப்போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் மூலம் பொது விமானப்போக்குவரத்து பங்கெடுப்பாளர்களுக்கு, பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.