சென்னை: எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்திடம் சென்னை க்யூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரிடமிருந்து கணினி, ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளராக மதுரையைச் சேர்ந்த பிரசாத் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில், பிரசாத் இந்தியா முழுவதும், தடை விதிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ) இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரையடுத்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்திடம் சில தினங்களுக்கு முன்பாக சென்னை க்யூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிரசாத் தனக்கும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரிடமிருந்து கணினி, ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்டவற்றை க்யூ புரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவே திருப்பரங்குன்றம் விவகாரம்" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு!
இதுகுறித்து மதிமுக பொது செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்திடம் தொடர்பு கொண்டு கேட்கையில், “கடந்த 40 நாட்களுக்கு முன்பாக சென்னை கியூ பிரிவு போலீசார் தன்னை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வைகோ நடத்தும் பொதுக் கூட்டத்திற்கு வரும் இலங்கை தமிழர்களில் குறிப்பிட்ட இரண்டு பேரை உங்களுக்கு தெரியுமா? என கேட்டனர்.
அவர்கள் இருவரையும் வைகோ நடத்தும் அனைத்து கூட்டத்திலும் நான் பார்த்துள்ளேன். மற்றபடி, அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தேன். நாங்கள் எடிட்டிங் பணி செய்வதற்காக சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள எனது அறையில் கணினி வைத்திருந்தோம். அதனை கியூ பிரிவு போலீசார் சோதனை செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
சோதனை முழுமையாக செய்த பிறகு மீண்டு கணினியை கொடுத்து விடுவோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மற்றபடி மீண்டும் விசாரணைக்கு வர சம்மன் எதுவும் வழங்கவில்லை. இந்த சம்பவத்தில் வேண்டும் என்று என்னை கோர்த்து விடுவதற்காக சிலர் பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.