தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது கொம்பாடி என்ற கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் தந்தை இயக்குநர் S.A சந்திரசேகரின் சொந்த கிராமம் என்று கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் தூய மிக்கேல் அதிதூதர் பங்கின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 75வது பவள விழா கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்றது. இந்த விழாவின் போது வெளியிடப்பட்ட பவள விழா மலர் மூலமாக இந்த தகவல் வெளிவந்துள்ளது.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தந்தை சேனாதிபதி காலம் வரை அவர்களது குடும்பத்தினர் இந்த கிராமத்தில் வாழ்ந்து உள்ளனர். சேனாதிபதி ரயில்வேத்துறையில் பணிபுரிந்த காரணத்தினால் அவரது குடும்பத்தினர் பரமக்குடி சென்றுவிட்ட நிலையில், கொம்பாடி கிராமத்தில் இன்னும் எஸ்.ஏ. சந்திரசேகர் உறவினர்கள் குடியிருந்து வருகின்றனர். அவர்கள் முன்னோர் வாழ்ந்த வீடு, நிலங்கள் அங்கு உள்ளன.
இந்நிலையில் கொம்பாடி கிராம மக்கள், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பூர்வீகம் தங்கள் கிராமம் என்றும், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் விஜய் திரைப்படத் துறையில் சாதித்தது தங்களது கிராமத்திற்கு பெருமை என்றும் கூறியுள்ளனர். மேலும் தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் கட்சிக்கு ஆதரவாக இருப்போம் எனவும், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் விஜய் தங்களது கிராமத்திற்கு வர வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
கொம்பாடி கிராமத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உறவினரான புனிதா என்பவர் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசுகையில், ”இந்த ஊரில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தின் பவள விழா கொண்டாட்டத்திற்காக அந்த கால கல்லறை பற்றி கேட்கும் போது, எஸ்.ஏ.சந்திரசேகரின் தந்தை, மற்றும் தாத்தா ஆகியோர் இங்கு வசித்தது தெரிய வந்தது. சந்திரசேகர் சார் பிறந்த பிறகு பிழைப்பிற்காக வேறு ஊர்களுக்கு சென்று விட்டனர். தற்போது விஜய் கட்சி தொடங்கியுள்ளார். அவர் மக்களுக்கு நல்லது செய்து முதல்வராக வர வேண்டும் என்பது எனது ஆசை” என கூறியுள்ளார்.
கொம்பாடி கிராமத்தை சேர்ந்த தவெக நிர்வாகி செல்வம் முருகன், பேசுகையில், “நான் தமிழக வெற்றிக் கழகத்தின் பணியாற்றி வருகிறேன். விஜய்யின் பூர்விக கிராமம் கொம்பாடி என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தோம். விஜய்யின் தாத்தா சேனாதிபதி கொம்பாடி கிராமத்தில் இருந்து ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்காக வேறு ஊருக்கு சென்றதாகவும், பின்னர் சென்னைக்கு சென்றதாக தெரியவந்தது. அவர்களது உறவினர்கள் இன்றும், கொம்பாடி கிராமத்தில் தான் உள்ளனர்.
இதையும் படிங்க: தண்ணீர் அண்டாவில் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு... தூத்துக்குடியில் சோகம்! - CHILD FELL IN ANDA VESSEL AND DIED
மேலும் கொம்பாடி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் பவள விழா புத்தகத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளர் சாமியின் பெயரும் அந்த பவள விழா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது” என கூறியுள்ளார்.