வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் கொள்ளைமேடு பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகள் லோகநாதன், கருணாநிதி, பெரியார் (65). இவர்கள் பூர்வீக நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். 3 பேரின் வீட்டிற்கும் இடையே நடைபாதைக்காக சுமார் 3 மீட்டர் அகலம் வழி விடப்பட்டுள்ளது. அனைவரும் காலம் காலமாக இந்த வழியில் பயணித்து வருகின்றனர். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது இந்த பாதையால் 3 பேருக்கும் பிரச்சினை நீடித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (பிப்.3) காலை 10 மணியளவில் லோகநாதன் மற்றும் அவரின் மகன்கள் சேகர், விஜயகுமார் ஆகியோர் வீட்டிற்கு செல்லும் வழியில் ஜேசிபி எந்திரத்தை கொண்டு பள்ளம் தோண்டி, அதில் தென்னங்கன்று வைக்க முயன்றுள்ளனர். இதனால், பெரியார் வீட்டிற்கு செல்லுவதற்கு வழி இல்லாததாக கூறி, தட்டி கேட்டுள்ளார்.
அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப் போகவே, இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த லோகநாதனின் மகன் சேகர் பெரியாரை காலால் உதைத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெரியாரை வெட்டி அருகே உள்ள 8 அடி பள்ளத்தில் கீழே தள்ளியுள்ளார்.
அதில் பெரியார் ரத்த வெள்ளத்தில் இருந்ததை பார்த்த குடும்பத்தினர் அவரை கார் மூலம் அணைக்கட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் முன்னதாகவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதற்கிடையே, இந்த சம்பவத்தில் பெரியாரின் மகன்கள் குணசேகரன், மாவீரன் ஆகியோருக்கும் கருணாநிதி மகன்கள் வேதவியாசன், தீபா ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உத்தரவு! விதிமுறைகளை வகுத்த நீதிமன்றம்!
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் புனிதா, தனிப்படை அமைத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 6 பேரை தேடும் பணியில் இறங்கினார்.
இதையடுத்து, நேற்று மதியம் இந்த சம்பவத்தில் தொடர்புடைய லோகநாதன், சேகர், விஜயகுமார், ராகுல், ராம்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில் வீரமணி தலைமறைவாக உள்ளார். தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் சித்தப்பாவை அண்ணன் மகன்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.