தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வரை இருந்த மீட்டர் கேஜ் ரயில் சேவை கடந்த 2010ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு அகல ரயில் இருப்புப் பாதையாக மாற்றும் பணிகள் 12 ஆண்டுகளாக நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வரையான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், போடிநாயக்கனூர் - மதுரை வரையான ரயில் சேவை பொதுமக்களின் கோரிக்கைகளை அடுத்துக் கூடுதலாக போடிநாயக்கனூரில் இருந்து சென்னை வரை இயக்கப்படத் தொடங்கின. அப்போது, இந்த ரயில் வாரத்திற்கு 3 நாட்கள் சென்னையிலிருந்து போடிநாயக்கனூருக்கும், போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில்கள் சென்னை - மதுரை வரை மின்சாரம் மூலம் இயக்கப்பட்டும், மதுரை - போடிநாயக்கனூர் வரை டீசல் இன்ஜின் ஆக மாற்றப்பட்டும் இயக்கப்பட்டு வந்தது. இதனால், ரயிலின் வேகம் குறைந்து, பயணத்தில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால், மதுரை - போடிநாயக்கனூர் வரையும் மின்சார போக்குவரத்து சேவை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: மதுரையில் 114 தடை உத்தரவு: "முருகனும், முருக பக்தர்களும் தண்டிப்பார்கள்" - வானதி சீனிவாசன் சூளுரை!
இந்நிலையில், இந்த பணிகள் தற்போது நிறைவு பெற்ற நிலையில் இன்று முதல் இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டன.
1. காலை 8.30 மணிக்குச் சென்னையிலிருந்து வந்த போடிநாயக்கனூர் பயணிகள் ரயிலும் (வாரத்தில் மூன்று முறை)
2. காலை 9.30 மணிக்கு மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் வரையிலான (தினசரி) பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டன.