சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித்துறை திட்டங்கள், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, 'அனைவருக்கும் இடைநிலை கல்வி' திட்ட மாநில இயக்குநர் ஆர்த்தி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சங்கர் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, "பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2024 - 2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்திற்கும் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' திட்டம் மூலம் 500 கோடி ரூபாய் நிதி உதவி பெறப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் பள்ளிகளின் உட்பட்ட அமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.
மேலும் மத்திய அரசு, 'அனைவருக்கும் இடைநிலை கல்வி' திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியினை தராவிட்டாலும், அடுத்த மூன்று மாதத்திற்கு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான நிதி மாநில அரசிடம் உள்ளது. எனவே ஆசிரியர்கள் ஊதியம் குறித்து கவலைப்பட தேவையில்லை.
இதையும் படிங்க: "அரசுப் பள்ளிகளை தத்தெடுப்போம் என எந்த இடத்திலும் சொல்லவில்லை" - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
அரசு பள்ளிகளுக்கு சிஎஸ்ஆர் நிதியின் மூலம் கட்டிடங்கள் கட்டித் தருபவர்கள் 15 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மாலை வேளையில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளன," என தெரிவித்தார்.
கலைஞரின் திருக்குறள் உரை
அதனைத் தொடர்ந்து, பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "கன்னியாகுமரியில் 'திருவள்ளுவருக்கு சிலை அமைத்து 25 ஆண்டுகள் முடிவுற்று விழா' கொண்டாடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 'வள்ளுவம் போற்றுதும்' என திருவள்ளுவர் புகழ் பரப்பும் வகையான நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
இனிமேல் நான் கலந்து கொள்ளும் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் எதுவானாலும் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு கலைஞர் எழுதிய உரையுடன் கூட்டத்தை தொடங்குவது என முடிவெடுத்துள்ளேன். புத்தாண்டில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இருந்து அதனை தொடங்குகிறேன் எனக்கூறி ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே’ என்ற திருக்குறளை வாசித்து கூட்டத்தை நடத்தி வருகிறார்.
பள்ளிக்கல்வித்துறையில் 'அனைவருக்கும் இடைநிலை கல்வி' திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, நம்ம ஸ்கூல் பவுண்டேஷன், அரசுத் தேர்வு துறை உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார்.