சென்னை: நெல்லை மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என விளக்கமளிக்கும்படி, கேரள அரசுக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக வெளியான செய்தியின் அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை மூன்று நாட்களில் அப்புறப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு டிசம்பர் 19ம் தேதி பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அமர்வில் இன்று (ஜன.2) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கேரள அரசிடம் சரமாரி கேள்வி
அப்போது, தீர்ப்பாயத்தின் உத்தரவின் அடிப்படையில், நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக கூறி, கேரள அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கழிவுகளை அனுப்பிய இரண்டு மருத்துவமனைகள் மற்றும் ஒரு ரிசார்ட்டுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஏழு நாட்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், வெறும் கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், டிசம்பர் 23ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி மனித கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசுத்தரப்பில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கழிவுகள் ஏற்றும் பணி மும்முரம்; மாஸ்க்குடன் வந்த கேரளா அதிகாரிகள்.. நெல்லை மக்கள் நிம்மதி!
இதையடுத்து, மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
கழிவுகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், மருத்துவமனைகளுக்கு எதிராக அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க வழங்கிய ஏழு நாள் அவகாசம் முடிந்த பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கேரளா அரசு தெரிவிக்கவில்லை. விதிமீறல் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ஏன் என அதிருப்தி தெரிவித்தது.
நெல்லை மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய மருத்துவமனைகள், ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என, கேரள சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும். கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தீர்ப்பாயமே உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என, கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.
மனித கழிவுகள் கொண்டு வரப்பட்ட விவகாரம் தொடர்பாக, இரு மாநில அரசுகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதை கேரள அரசு நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
எல்லை மாவட்டங்களில் சிறப்பு அதிரடிப்படையை அமைத்து கழிவுகள் கொண்டு வரப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கின் விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.