உணவுக்கு பின் பெருஞ்சீரகம்: உணவுக்கு பின் ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடும் போது உமிழ்நீரின் உற்பத்தி அதிகரித்து, செரிமானத்திற்கு உதவியாக இருக்கிறது. கூடுதலாக, வாய் துற்நாற்றமும் நீங்கும்.
சோம்பு தண்ணீர்: பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிட விரும்பாதவர்களுக்கு சோம்பு ஊற வைத்த தண்ணீர் சிறந்த மாற்றாக இருக்கும். ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து, 10 முதல் 15 நிமிடங்களுக்கு பின் குடிக்கவும். இது, அஜீரணம் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸிற்கு சிறந்த தீர்வை தரும். உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக அல்லது பின்பு இந்த நீரை பருகுவதால், செரிமானத்தை ஊக்குவிப்பதோடு, வயிற்று பிடிப்பை குறைக்கவும் இயற்கையான நச்சு நீக்கியாகவும் செயல்படுகிறது.
பெருஞ்சீரகம் டீ: ஒரு சிலர் காலை மற்றும் மதிய உணவுக்கு பின் டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சோம்பு பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட தேநீர் சிறந்த மாற்றாகவும் பல நன்மைகளை தரும். 2 கிளாஸ் தண்ணீரில் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து 1 கிளாஸ் தண்ணீர் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைக்கவும். விருப்பப்பட்டால் இஞ்சி சேர்க்கலாம். பின்னர்,வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம். இது செரிமானத்தை எளிதாக்குவதோடு, உடம்பை தளர்வாக்கி நல்ல தூக்கத்தை தருவதால் இரவு தூங்க செல்வதற்கு முன்னரும் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
தேனுடன் பெருஞ்சீரகம்: கடுமையான செரிமான பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள், பெருஞ்சீரகத்துடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்ல பயனை தரும். தேன் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு அறியப்படுகிறது, இது பெருஞ்சீரகத்துடன் இணையும் போது நன்மைகள் அதிகரிக்கின்றன. இதற்கு, ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை நன்கு தட்டி, ஒரு டீஸ்பூன் தேனுடன் கலக்கவும். இந்த கலவையை உணவுக்குப் பின் எடுத்துக்கொள்வதால் நீண்ட நாட்களாக இருந்த செரிமான பிரச்சனை நீங்கும்.
உணவில் சோம்பு தூள்: சமையலுக்கு மற்ற மசாலாக்களை பயன்படுத்துவது போல, பெருஞ்சீரகத்தையும் தூள் செய்து பயன்படுத்துவதால் செரிமான பிரச்சனைகள் நீங்கி வயிற்று வலியை குறைக்கிறது. இதற்கு, பெருஞ்சீரகத்தை பொடி செய்து அதனுடன் சம அளவில் இஞ்சி தூள் சேர்த்து காற்று புகாத டப்பாவில் வைக்க வேண்டும். பின்னர், சமைக்கும் போது ஒரு டீஸ்பூன் இந்த பொடியையும் மற்ற மசாலாக்களுடன் சேர்க்கலாம்.