சென்னை:தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநரான ஹரி, சாமி, அருள், தாமிரபரணி, சிங்கம் என கமர்ஷியல் படங்களை எடுப்பதில் கில்லாடி. இவரது படங்கள் எப்போதுமே ஒருவித விருவிருப்புடன் ஆடியன்சை திருப்திப்படுத்துவது போல் இருக்கும். கடைசியாக அருண் விஜய் நடித்த யானை படத்தை இயக்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால், சூர்யா கங்குவா படத்தில் பிஸியாக இருப்பதால் அந்த படம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது விஷாலை வைத்து "ரத்னம்" என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார்.
ஏற்கனவே விஷால், ஹரி கூட்டணியில் உருவான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் இருவருக்கும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இரு வெற்றிகளைத் தொடர்ந்து மூன்றாவது முறை ரத்னம் படத்தில் இணைந்துள்ள விஷாலுக்கு இப்படத்தில் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். விஷாலின் 34-வது படமான ரத்னம் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.