ஹைதராபாத்: சுமன் குமார் இயக்கத்தில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரகு தாத்தா’. கே.ஜி.எப், காந்தாரா உள்ளிட்ட மெகா ஹிட் படங்களை தயாரித்த ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா படத்திற்கு சியன் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரவீந்திர விஜய், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ராஜிவ் ரவீந்திரநாதன், ஜெயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
யாமினி யாக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், 'ரகு தாத்தா' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. டிரெய்லரில் ரசிகர்களைக் கவரும் வகையில் காமெடி காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
மேலும், டிரெய்லர் மூலம் இப்படத்தின் கதை 1980களில் நடப்பது போன்று காட்சிபடுத்தப்பட்டுள்ளது. ரகு தாத்தா படத்தின் முதல் சிங்கிள் ’அருகே வா’ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், இரண்டாவது சிங்கிள் ‘ஏக் காவ் மே’ பாடலும் கடந்த 29ஆம் தேதி வெளியானது.