திருநெல்வேலி:இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியாகியுள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள செந்தில்வேல் திரையரங்கத்தில் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் பார்ப்பதற்காக வந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் வெற்றிமாறன் கூறுகையில், ”இயக்குநர் அமீர் நடித்த திரைப்படம் பார்ப்பதற்காக வந்துள்ளேன்.
சீரியஸான அமீர் ஜாலியான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கு சிறந்த படமாக இருக்கும். இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வு சமூக பாகுபாடு இல்லை என்று சொல்பவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியா முழுக்க சாதியப் பாகுபாடுகள் உள்ளது. தமிழகத்திலும் இருக்கிறது, அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணம்.
விடுதலை இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் நடந்து வருகிறது. 20 முதல் 25 நாட்களுக்கு படப்பிடிப்புக்கான வேலைகள் உள்ளது. அது முடிந்தவுடன், திரைப்படம் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும். விடுதலை திரைப்பட பணிகள் நிறைவு பெற்றவுடன், வாடிவாசல் திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கும்” என்றார்.
பாடல் உரிமை யாருக்கு சொந்தம் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "சம்பளம் கொடுத்து தான் வேலைக்கு நாம் செல்கிறோம். காப்புரிமை பிரச்னை என்பது அனைத்து தளங்களிலும் உள்ளது. உருவாக்குபவர்களுக்கான உத்தரவாதமும், உரிமையும் தேவை என்பதை நான் நினைக்கிறேன்” என்றார்.