சென்னை:நடிகரும், இயக்குநருமான அர்ஜுன் தங்கை மகன், துருவ் சர்ஜா நாயகனாக நடித்துள்ள படம் மார்டின். இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை அர்ஜுன் எழுதியுள்ளார். அடுத்த மாதம் 11ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள மார்டின் படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் அர்ஜுன், படத்தின் நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அர்ஜுன் பேசியதாவது, "நான் நிறைய கமர்ஷியல் படம் எழுதி இருக்கிறேன், இயக்கியும் இருக்கிறேன். ஆனால், இந்த படம் அதிலிருந்து நிறைய வேறுபடும். இந்த படத்திற்கு 125 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர் ஹேமா கமிட்டி தொடர்பாக பேசிய அவர், “என்னுடைய மகளை வைத்து தெலுங்கில் ஒரு படம் இயக்கி வருகிறேன். அந்தப் படத்தில் இந்த பிரச்னை தொடர்பான ஒரு காட்சியை எழுதியுள்ளேன். பெண்களுக்கு மட்டும் அல்ல, சமுதாயத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் சினிமாவில் அதை கொஞ்சமாவது காட்ட வேண்டும்.
நாம் இங்கு பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் நாட்டில் எத்தனை பேருக்கு அநியாயம் நடந்து கொண்டிருக்கும். எல்லா இடத்திற்கும் சென்று ஹீரோவால் காப்பாற்ற முடியாது. ஒவ்வொருவருக்கும் தார்மீகப் பொறுப்பு இருந்தால் தான் இது போன்ற விஷயங்களைத் தடுக்க முடியும் என்றார்.