சென்னை: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகர்களுள் ஒருவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் உருவாகும் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், அஜர்பைஜானில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதை விடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு 'விடாமுயற்சி' படத்தின் சில முக்கிய காட்சிகள் அஜர்பைஜான் தலைநகர் பாகு பகுதியில் தொடங்கியது. அப்போது, சண்டைக் காட்சி ஒன்றின் படப்பிடிப்பின் போது அஜித் மற்றும் ஆரவ் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
அதன் பின்னர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் மீண்டும் அஜர்பைஜானில் 'விடாமுயற்சி' படத்தின் படபிடிப்பு துவங்கியது. அதில் படத்தின் கிளைமாக்ஸ் உள்ளிட்ட சில முக்கிய காட்சிகள் படம் பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், படப்பிடிப்பின் நிறைவு குறித்து தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் அஜித் உட்பட படக்குழுவினர் பலர் இடம்பெற்றிருந்தனர். முன்னதாக, ஜூன் 30ஆம் தேதி 'விடாமுயற்சி' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கும், ஜூலை 7ஆம் தேதி படத்தின் படத்தின் செகண்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.