சென்னை:வணிகம் மற்றும் ஏற்றுமதி சுற்றுச்சூழலைப் பிரதிபலிக்கும் அரசு சிந்தனைக் குழுவான நிதி அயோக் (NITI Aayog) 2023-24 ஆண்டிற்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஏற்றுமதி செய்வதற்கான சூழல் இருக்கும் மாநிலங்களை கண்டறிந்து வெளியிடப்பட்ட தரவரிசையில் தமிழ்நாடு முதல் இடத்தையும், மகாராஷ்ட்ரா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. மின்னணு, தோல் பொருட்கள், ஜவுளி ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி:2023-24 நிதியாண்டில், தமிழ்நாடு 7.36 பில்லியன் டாலர் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி செய்து, முதல் இடத்தை பிடித்துள்ளது. உத்தரப் பிரதேசம் 3.55 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் இந்தியா 22.65 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
முந்தைய நிதியாண்டில், தமிழ்நாடு 5.37 பில்லியன் டாலர் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி செய்து முதலிடத்தை பிடித்தது. அதன் படி எலக்ட்ரானிக் ஏற்றுமதியில் தமிழ்நாடு கணிசமான எழுச்சியை கண்டு வருகிறது. தமிழ்நாடு முதலீடுகளை ஈர்ப்பது, புதுமைகள் மற்றும் தொழில் முனைவோரை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு வருவதால் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ், சோனி, ஃபாக்ஸ்கான் போன்ற மின்னணு உற்பத்தியாளர்கள் தமிழ்நாட்டில் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியில் ஈடுபடுவது மாநிலத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன் உற்பத்தி ஆலை தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படும் நிர்வாகம், உற்பத்தி மற்றும் துல்லியப் பொறியியலில் சிறந்து விளங்குதல், உயர்தர தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டு, அபார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது என மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதல் இடத்தை பெற்ற நிலை தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.