சென்னை: தங்கத்தின் விலை அண்மையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் ஆபரண தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.8060-க்கும் சவரன் ரூ.64,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16,000-க்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி 1-ம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,150 ரூபாயாகவும், சவரன் ரூ.58,200 ஆகவும் இருந்தது. ஆனால் 42 நாட்களில் ஒரு கிராமுக்கு 910 ரூபாய் உயர்ந்துள்ளது.
தற்போது உயர்ந்து வரும் தங்கத்தின் விலை குறித்து சென்னை தங்கம் வைரம் விற்பனையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் சாந்தகுமாரிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:
சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கக் கூடிய மிகப்பெரிய மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலை கூடிக் கொண்டே செல்கிறது. முக்கியமாக ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும், பொருளாதார நிலையற்ற தன்மையுமே தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவின் அதிபராக டிரம்ப பொறுப்பேற்ற பிறகு அந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக உலக நாடுகள் டாலரில் வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். உலக வர்த்தகமே டாலரில் தான் என்ற மாயையை ஏற்படுத்தி வருகிறார்.
சர்வதேச அளவில் மறைமுகமாக தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதே அமெரிக்கா தான். ஏனென்றால் வர்த்தகம் அனைத்தும் டாலரில் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால் டாலரின் மதிப்பு கூட கூட தங்கத்தின் மதிப்பும் கூடிக் கொண்டு செல்கிறது. அமெரிக்காவிற்கு சவாலாக இருக்கும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பின் வர்த்தக மதிப்பை உடைக்க அமெரிக்க முயன்று வருகிறது. டாலருக்கு போட்டியாக வர்த்தகம் செய்ய விரும்பும் நாடுகளின் பணத்திலேயே வர்த்தகத்தை செய்யலாம் என பிரிக்ஸ் கூட்டமைப்பு முயற்சி செய்வதால் டாலரின் மதிப்பு சரியும் என அமெரிக்க கருதுகிறது.
இருந்தாலும் உலக அளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதாலும் தங்கத்தின் தேவை அதிகம் இருப்பதாலும் தற்போது தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. மார்ச் மாதம் இறுதிக்குள் தங்கத்தின் விலை கிராமுக்கு 8000 ரூபாய் என இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 2-வது வாரத்திலேயே தங்கத்தின் விலை ரூ.8,000 கடந்துள்ளது.
இதே வேகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டு சென்றால் டிசம்பர் மாதம் இறுதிக்குள் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,000 ஆக இருக்கும். மேலும் தங்கத்தின் விலை எதிர்பார்க்கப்பட்டதை விட உயர்ந்து கொண்டே செல்லும் நேரங்களில் தங்கத்தின் விலை உயர்வில் சிறிய சறுக்கல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தங்கத்தின் விலை கூடிக்கொண்டு செல்வதால் முதலீடு செய்வதில் சிறிய சறுக்கல்கள் ஏற்படும் போது தங்கத்தின் விலை சற்று குறையக்கூடும்.
இவ்வாறு சாந்தகுமார் தெரிவித்தார்.