அமராவதி (ஆந்திரப் பிரதேசம்): இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி 7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் 4ஆம் கட்ட வாக்குப்பதிவானது 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் என மொத்தமாக 96 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று (மே 13) நடைபெறுகிறது.
அதில் ஒருபகுதியாக, ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்குக்கான தேர்தலோடு சேர்த்து 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று (மே 13) ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன.
விஜயவாடாவில் உள்ள பசுமை வாக்குச் சாவடியில் ஆளுநர் நசீர் மற்றும் அவரது மனைவி சமீரா நசீர் ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தினர். அதேபோல, கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவெந்துலா தொகுதியில் உள்ள பாகரபுரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியும்; அமராவதியில் சந்திரபாபு நாயுடுவும், அவரது மனைவியும்; மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் மங்களகிரியிலும் வாக்களித்தனர்.
இந்த நிலையில், பல்நாடு மாவட்டத்தில் உள்ள மச்செர்லா மண்டலத்தில் காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக, ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதலில் தெலுங்கு தேசம் கட்சியின் பெண் ஆதரவாளர் ஒருவரின் நெற்றியில் பெரிய வெட்டுக் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.