புதுடெல்லி:வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயத்துக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26ஆம் தேதி முதல் ஜக்ஜித் சிங் தலேவால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவரது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக அவருக்கு மருத்துவ உதவி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கூறி பஞ்சாப் அரசை உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜால் புயான் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "தலேவால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எந்த உத்தரவும் பிறபிக்கப்போவதில்லை.அவரது உடல் நிலை குறித்து மட்டும் கவலை தெரிவிக்கின்றோம்.அவருக்கு மிகவும் அவசரமாக மருத்துவ உதவி அளிக்க வேண்டும்,"என்று வலியுறுத்தினர்.
அப்போது வாதிட்ட பஞ்சாப் அரசு வழக்கறிஞர் குருமிந்தர் சிங், "மாநில அரசு இந்த விஷயத்தில் பாகுபாடான நிலைப்பாடு கொண்டிருக்கவில்லை,"என்று கூறினார். ஊடகங்களில் சில விவசாயிகளின் தலைவர்கள், மாநில அரசு அதிகாரிகள் பொறுப்பில்லாத வகையில் அறிக்கைகள் வெளியிடுவதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. "விவசாயிகளின் போராட்டம் குறித்து ஒரு குழு அமைக்க உச்ச நீதிமன்றம் முன் வந்திருப்பது குறித்து அரசிடம் கூறினீர்களா? உங்கள் (பஞ்சாப் அரசு) நிலைப்பாடு சமரச போக்கு கொண்டதாக இல்லை. அதுதான் பிரச்னை,"என்று நீதிபதிகள் கூறினர்.