டெல்லி: அணுசக்தி துறையின் ஆற்றல் மிக்க ஆய்வாளராகத் திகழ்ந்த ராஜகோபால சிதம்பரம் தனது 88 வயதில் காலமானார். மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் அதிகாலை 3.20 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் இருந்த ராஜகோபால சிதம்பரம், அணு ஆயுத திட்டங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டவர் ஆவார். இவருக்கு 1975ஆம் ஆண்டில் இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருதும், 1999-இல் பத்ம விபூஷன் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில், 1962-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் (Ph.D) பெற்ற இவர், அதே ஆண்டில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) வேலைக்கு சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து 1990-இல் இதே மையத்திற்கு இயக்குநராக பொறுப்பேற்று சக்தி மிகுந்த மனிதராக இருந்தார்.
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இயற்பியலாளர்களில் ஒருவராகக் கருதப்படும் சிதம்பரம், நாட்டில் அடிப்படை அறிவியல் மற்றும் அணுசக்தி தொழில்நுட்பத்தின் பல துறைகளில் தனது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இந்திய அணுசக்தித் துறையில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்த இவர் 1993 முதல் 2000 வரை இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றினார். 1974-ஆம் ஆண்டு பொக்ரான் அணுசோதனையில் முக்கியப் பங்காற்றினார். மேலும், 1998-ஆம் ஆண்டு பொக்ரான் இரண்டாம் அணுசோதனையில் பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதங்களை வடிவமைத்த அணுசக்தித் துறை குழுவையும் தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார்.
இவர் அணுசக்தித் துறையை வழிநடத்திய காலத்தில், அணுமின் திட்டங்கள் பெரும் வளர்ச்சியடைந்தன. 1994-95 ஆம் ஆண்டுகளில் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆளுநர் குழுவின் தலைவராகவும் இருந்தார்.
இதையும் படிங்க |
2008-ஆம் ஆண்டில், "2020 மற்றும் அதற்கு அப்பால் ஐஏஇஏவின் பங்கு" என்ற தலைப்பில் அறிக்கை தயாரிக்க ஐஏஇஏ அமைத்த முக்கிய நபர்கள் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1990-99 ஆம் ஆண்டுகளில் சர்வதேச படிகவியல் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினராகவும், பின்னர் துணைத் தலைவராகவும் இருந்தார்.
பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் ஆகிய விருதுகளுடன், டாக்டர். ஆர். சிதம்பரம் பல விருதுகளையும் பெற்றுள்ளார். அவற்றுள் சிலவற்றைக் கீழ்வருமாறு காணலாம்.
- இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூருவின் சிறந்த முன்னாள் மாணவர் விருது (1991)
- இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் சி.வி. ராமன் பிறந்தநாள் நூற்றாண்டு விருது (1995)
- லோகமானிய திலகர் விருது (1998)
- இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் மேக்னட் சாகா பதக்கம் (2002)
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய சிறப்பு விருது (2003)
- இந்திய அணுசக்தி சங்கத்தின் ஹோமி பாபா வாழ்நாள் சாதனை விருது (2006)
- இந்திய தேசிய பொறியியல் அகாடமியின் பொறியியல் துறையில் வாழ்நாள் சாதனை விருது (2009)
- இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் சி.வி. ராமன் பதக்கம் (2013)
- மின்சார நிறுவனங்கள் குழுமத்தின் வாழ்நாள் சாதனை விருது (2014)
டாக்டர் ராஜகோபால சிதம்பரம் அணுசக்தித் துறையில் பல சாதனைகளை செய்து புரட்சி ஏற்படுத்தியவர் என்றே சொல்லலாம். அவரது பங்களிப்பு இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் அறிவியல் முன்னேற்றத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளது.