சென்னை: தமிழ்நாடு கடற்கரையில் சுமார் 350க்கும் மேற்பட்ட அரியவகை கடல் ஆமைகள் 2025 ஜனவரி மாதத்திற்குள் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் குழு எச்சரிக்கை செய்துள்ளது என செய்திகள் வெளியானது. இதன் அடிப்படையில் தென் மண்டல பசுமை தீர்ப்பாய உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கோர்லபாடி அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த வழக்கு இன்று (பிப் 07) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார். மேலும், அனுமதியின்றி விசைப்படகுகளை தடை செய்யப்பட்ட பகுதியில் இயக்கிய 172 படகு உரிமையாளர்களின் மானியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 30 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு படகுகள் இயக்கப்படவில்லை. ஆந்திர மீனவர்களுக்கும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிவேக இயக்கும் படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உயிரிழந்த ஆமைகள் தலையில் காயம், அதிர்ச்சி மற்றும் மூச்சு விட முடியாமல் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆமைகள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அறிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆமைகள் இனப்பெருக்க காலமான ஜனவரி முதல் ஏப்ரல் வரை குறிப்பிட்ட பகுதியில் விசைப் படகுகளை இயக்க தடை விதித்து 2015ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஏன் அமல்படுத்தவில்லை.
இதையும் படிங்க: அதிமுக சின்னம் வழக்கு: “தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரத்தில் விசாரணை நடத்த முடியாது!” - இ.பி.எஸ் வாதம்! - AIADMK PARTY SYMBOL CASE
தொடர்ந்து நடவடிக்கை எடுக்க தவறினால் அபராதம் விதிக்க நேரிடும் என தெரிவித்தனர். மேலும், தடை செய்யப்பட்ட பகுதியில் இயங்கும் படகுகளுக்கு அபராதமும், நிரந்தர தடையும் விதிக்க ஆந்திரா உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏன் இந்த முறையை கொண்டு வர கூடாது? என கேள்வி எழுப்பி நீதிபதிகள், ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் படகுகள் இயக்க தடை விதிக்க வேண்டும். தலைமை செயலாளர் நேரடியாக கண்கானிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.