சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியர்களை அவமானப்படுத்தியது, இந்தியாவை அவமானப்படுத்தியது போல், இந்தியா அதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகத்தில், அக் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. நூற்றாண்டு காலம் வரலாறு கம்யூனிஸ்ட் கட்சிகளில் தியாகங்களில் வரலாறு. கட்சி பல சவால்களை எதிர் கொண்டுள்ளது. அகில இந்திய மாநாடு செப்டம்பர் 21 முதல் 25 வரை பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற இருக்கிறது. நாடு பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் பன்முகத்தன்மைக்கு பாஜக, ஆர் எஸ் எஸ் ஆகிய கட்சிகளினால் அச்சுறுத்தல்கள் நிலவி வருகிறது. அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியது ஏற்புடையது அல்ல. கண்டிக்கத்தக்கது.
இந்தியாவை மத ரீதியான நாடாக அமைக்க வேண்டும், இந்து ராஷ்ட்ரியமாக நடத்த வேண்டும் என அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது . ஆனால் அம்பேத்கர் அதனை மறுத்து விட்டார். இந்தியாவை ஒன்றிய அரசு என அம்பேத்கர் கூறியதால் அம்பேத்கரை எதிர்க்கின்றனர்.
அடிப்படை நெறிகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. பாஜக ஆர்எஸ்எஸ் சேர்ந்து மதரீதியான மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. இந்தியாவில் பாபர் மசூதியுடன் நிற்கவில்லை மதுராவிலும், காசியிலும் பிரச்னை இருக்கிறது என ஆர் எஸ் எஸ் பகிரங்கமாக சொல்லி உள்ளது.
இந்தியா எப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் உள்ளது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரித்து உள்ளது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அந்நிய நாடுகளிடம் இருந்து வாங்கும் கடன் அதிகரித்து வருகிறது. பட்ஜெட்டில் நடுத்தர மக்கள், உயர்தர மக்கள் என பிரித்துள்ளனர். ஆனால் பட்ஜெட்டில் அடிப்படை பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் சொல்லவில்லை. பட்ஜெட் ஏழைகளை வஞ்சித்துள்ளது.
கல்வி, மருத்துவம் போன்றவற்றிக்கு தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பட்ஜெட்டை எதிர்த்து பிப்ரவரி 14 முதல் 20 ஆம் தேதி வரை நாடு தழுவிய முறையில் பிரச்சாரம் செய்ய உள்ளோம். மார்ச் 23 முதல் ஏப்ரல் 14 வரை சமுகநீதி, சமத்துவம், பாஜக அரசிலிருந்து மக்களை காப்பதற்காக அரசியல் சித்தாந்த பேரியக்கத்தை நடத்த உள்ளோம்.
அமெரிக்காவிலிருந்து இந்தியர்களை எப்படி காலில் சங்கிலியால் கட்டி விமானத்தின் மூலம் இந்தியாவில் குவித்தார்கள் என்பதை கண்டு நாடே அதிர்ந்தது. ட்ரம்பின் கொள்கைகள் ஏகாதிபத்தியத்தின் வெறித்தனம் கொண்ட கொள்கையாக உள்ளது. இது குறித்து இந்திய அரசாங்கம் என்ன பதில் சொல்லப் போகிறது? டிரம்ப் இந்தியர்களை அவமானப்படுத்தியது, இந்தியாவை அவமானப்படுத்தியது போல், இந்தியா அதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இந்தியா பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வேண்டும் என்பதை தொடர்ந்து கூறி வருகிறோம். இதுகுறித்து மாநாடுகளில் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளோம். அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
பாலியல் வன்கொடுமை எந்த பகுதியில் நடைபெற்றாலும் அதற்கு எதிராக நாங்கள் இருக்கிறோம். எந்த பகுதியிலும் பாலியல் வன்கொடுமைகள் நடைபெற கூடாது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்பது மத்திய தொழிற்சங்கங்களில் கோரிக்கையாக உள்ளது. எல்லா மாநிலங்களிலும் வலியுறுத்தப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இது வலியுறுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசும் பரிசீலிக்கக் வேண்டும்.
இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.