மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மையப்பகுதியான நான்டெட்டில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம், 2006ஆம் ஆண்டு நான்டெட்டில் நடந்த வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
நான்டெட் நகரில் உள்ள ஆர்எஸ்எஸ் நிர்வாகி லக்ஷ்மன் ராஜ்கோந்த்வார் என்பவரது வீட்டில் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி மற்றும் 5ஆம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இருவர் உயிரிழந்தனர். இந்த வழக்கின் ஆரம்ப கட்டத்தில் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு போலீசார் விசாரணை செய்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணக்கு மாற்றப்பட்டது.
வழக்கில் மொத்தம் 12 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.அவர்களில் இருவர் குண்டு வெடிப்பில் இறந்து விட்டனர். இந்த குண்டு வெடிப்பில் ராஜ்கோந்த்வார் மகன் நரேஷ், விஷ்வ இந்து பரிஷித் இயக்கத்தைச் சேர்ந்த ஹிமான்சு பான்சே ஆகியோர் பலியாகினர். வெடிகுண்டு தயாரிக்கும்போது இவர்கள் இருவரும் உயிரிழந்ததாக புலனாய்வு மேற்கொண்ட போலீசார் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கு குறித்த விசாரணை நான்டெட் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது ஒருவர் உயிரிழந்து விட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த மாவட்ட மற்றும் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சிவி மராத்தே, குற்றம் சாட்டப்பட்ட மீதமுள்ள 9 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிதி ரன்வால், இந்த வழக்கில் 49 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார்.
அரசு தரப்பில் இந்த சம்பவம் குண்டு வெடிப்பு அல்லது எரிவாயு சிலிண்டர் வெடிப்பு அல்லது வேறு எரியக்கூடிய பொருட்கள் வெடித்ததா? என்பதை நிரூபிக்க தவறி விட்டனர்.