புதுடெல்லி: ஒரே வரலாறு, ஒரே மொழி, ஒரே பாரம்பரியம் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையை முன்னெடுக்கும் வகையில் யுஜிசி வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக மாணவரணி நடத்திய ஆர்பாட்டத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியர் நியமனம், கல்வி அலுவலர்கள் நியமனம் ஆகியவை குறித்து பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள வரைவு விதிமுறைகள் ஒரே வரலாறு, ஒரே பாரம்பரியம், ஒரே மொழி என ஆர்எஸ்எஸ் கொள்கையை திணிக்கும் முயற்சியாகும்.
அரசியல் சட்டத்தின் மீது தாக்குதல்: நாட்டின் இதர வரலாறுகள், கலாசாரங்கள், பாரம்பரியங்களை அழிப்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் குறிக்கோளாக இருக்கிறது. அது தான் அவர்களின் தொடக்கப்புள்ளியாக இருக்கிறது. அதைத் தான் அவர்கள் அடைய விரும்புகிறார்கள். இந்த நாட்டில் ஒரே வரலாறு, ஒரே பாரம்பரியம், ஒரே மொழி தான் இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு கொள்கையை அவர்கள் அடைய விரும்புவது என்பது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலாகும்.
பல்வேறு மாநிலங்களில் கல்வி முறையில் இதனை மேற்கொள்வது என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகளை திணிக்கும் இன்னொரு முயற்சியாகும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பாரம்பரியம், வரலாறு, மொழி உள்ளது. அதனால் தான் அரசியலமைப்பு சட்டத்தில் மாநிலங்களின் ஒன்றியம் என்று இந்தியா அழைக்கப்படுகிறது. அனைத்து வரலாறுகள், பாரம்பரியங்கள், மொழிகள் ஒன்றிணைந்து இந்தியாவை மாநிலங்கள் கொண்ட ஒன்றியமாக உருவாக்கி உள்ளன என்பதே இதன் அர்த்தமாகும். இப்படித்தான் இதுபற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
இந்த நாடு அனைத்து மொழிகள், கலாசாரங்கள், பாரம்பரியங்கள், வரலாறுகளுக்கு மதிப்பளிக்கிறது. அவை எங்கிருந்து வந்தன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு என வரலாறு, மொழி, பாரம்பரியங்கள் உள்ளன. அதற்காக அவர்கள் போராடுகின்றனர். இந்த நிலையில் யுஜிசி வரைவு விதிமுறைகள் தமிழ் மக்களை அவமதிப்பது மட்டுமின்றி, இதர அனைத்து மாநிலங்களையும் அவமதிப்பதாகும். இங்கெல்லாம் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது,"என்றார்.
தேசிய கல்வி கொளகைக்கு எதிர்ப்பு: இதே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், "மாநில அரசின் அனைத்து அதிகாரங்களையும் பாஜக-ஆர்எஸ்எஸ் ஆகியவை கைப்பற்ற நினைக்கின்றன. அரசியல்வாதிகளை தொழிலதிபர்களின் சேவகர்களாக மாற்ற விரும்புகின்றனர். புதிய கல்வி கொள்கையை நாம் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை. இங்கு உள்ள மாணவர்கள் மேற்கொள்ளும் முடிவுக்கு நான் ஆதரவு தெரிவிக்கின்றேன். நான் தேசிய கல்வி கொள்கைக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ளேன்," என்றார்.
இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த மாநில உயர் கல்வி அமைச்சர்கள் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சி தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், "யுஜிசி வரைவு விதிமுறைகள் அரசியல் சட்டத்துக்கு எதிரானது கொடூரமானது. எனவே இதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்,"என்று வலியுறுத்தினார். பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் யுஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக 15 அம்ச தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, இமாச்சலபிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களின் அமைச்சர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.