மதுரை: சிறைகளில் விசாரணை கைதி, குண்டர் சட்ட கைதிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் உண்டு என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
நெல்லையைச் சேர்ந்த ராமலிங்கம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ''என் மகன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதியாக உள்ளார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்னை உள்ளது. நன்கு படித்துள்ளார். இவற்றை கருத்தில் கொண்டு என் மகனுக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி அளிக்க வேண்டும். இது தொடர்பாக பல முறை மனு அளித்து வருகிறேன். என் மனுவை பரிசீலித்து என் மகனுக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி அளிக்க உத்தரவிட வேண்டும்'' என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி ஆர்.பூர்ணிமா அமர்வு, "மனுதாரர் மகனுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளது. அவரால் தரையில் படுக்க முடியாது. இதனால் சிறையில் மகனுக்கு படுக்கை வசதியும், வெஸ்டர்ன் கழிப்பறை வசதியும் செய்து கொடுக்க வேண்டும். இந்த வசதிகள் ஏ வகுப்பு சிறைவாசிகளுக்கு தான் கிடைக்கும். இதனால் ஏ வகுப்பு வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல்!
விசாரணை கைதி, குண்டர் சட்ட கைதிகள் யாராக இருந்தாலும் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் உண்டு. சிறை விதி எல்லைக்குள் நின்று விடக்கூடாது. விரிவடைய வேண்டும். சிறை கைதிகளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, கைதிக்கு தேவையான குறைந்தபட்ச வசதிகளை வழங்க மறுக்கக்கூடாது.
மனுதாரர் சிறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க வேண்டும். சிறை கண்காணிப்பாளர் சிறைத்துறை டிஐஜி வழியாக உள்துறை செயலாளருக்கு உரிய பரிந்துரையை அனுப்ப வேண்டும். அந்த பரிந்துரை அடிப்படையில் உள்துறை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.