டெல்லி:மத்திய டெல்லி ஜெய் சிங் சாலையில் உள்ள காவல் தலைமையகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. மத்திய டெல்லியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நங்லோய் பகுதியில் வெடிகுண்டு புதைத்து வைக்கப்பட்டு உள்ளதாக அந்த மிரட்டல் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தீவிர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் போலி என கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியின் ஐபி அட்ரசை கொண்டு விசாரணை நடத்திய போலீசார் மிரட்டல் விடுத்தது சிறுவன் என கண்டறிந்தனர்.
இதையடுத்து சிறுவனை பிடித்து விசாரித்த போலீசார் மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்தனர். மேலும், சிறுவனுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிய போலீசார் தொடர்ந்து அவனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். சிறுவன் அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடிய எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.