புதுடெல்லி: வக்ஃபு வாரிய சட்ட மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பாலுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன் வைத்த திமுக எம்பிக்கள் இருவர் உட்பட எதிர்க்கட்சிகளின் 10 எம்பிக்கள் ஒரு நாள் மட்டும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வக்ஃபு வாரிய மசோதா குறித்த நாடாளுமன்றகூட்டுக் குழு கூட்டத்தின் தலைவர் பாஜக எம்பியான ஜெகதாம்பிகா பால், வலுக்கட்டாயமாக செயல்படுகின்றார், அரசின் உத்தரவுகளை நிறைவேற்றும் அடிப்படையில் செயல்படுகிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடத்தைகள் மீது குறை சொல்கிறார் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உறுப்பினர்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜெகதாம்பிகா பால், "திரிணாமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி அவமதிக்கும் வகையில் பேசுகிறார். கூட்டத்தை ஒழுங்காக நடத்த முயற்சி செய்கின்றேன். இரண்டு முறை கூட்டத்தை தள்ளி வைத்தேன். ஆனால், பலனளிக்கவில்லை,"என்று கூறியுள்ளார்.
ஒரு நாள் சஸ்பென்ட்: இதனிடையே குழுவில் இடம் பெற்றுள்ள பாஜக உறுப்பினர் நிஷ்காந்த் துபே, எதிர்க்கட்சி உறுப்பினர்களை குழுவில் இருந்து நீக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை குழு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கல்யாண் பானர்ஜி, நதீம் உல் ஹக், காங்கிரஸ் உறுப்பினர்கள் முகமது ஜாவேத், இம்ரான் மசூத், சையது நசீர் ஹூசைன், திமுக உறுப்பினர்கள் ஆ.ராசா, முகமது அப்துல்லா, ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஓவைசி, சமாஜ்வாதி கட்சியின் மொஹிபுல்லா, சிவசேனா-உத்தவ் தாக்ரே பிரிவு எம்பி அரவிந்த் சாவாந்த் ஆகியோர் இன்று ஒரு நாள் மட்டும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக நாடாளுமன்ற கூட்டுக் குழு தொடங்கியதுமே தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். கூட்டத்தின் நிகழ்வுகளை வலுக்கட்டாயப்படுத்தி நடத்துகிறார். கூட்டத்தின் தலைப்பை மாற்றுகிறார் என்று கூறினர். இதையடுத்து 10 உறுப்பினர்களை ஜெகதாம்பிகா பால் சஸ்பென்ட் செய்தார். எனினும் கூட்டத்தில் தொடர்ந்து அமளி நிலவியது. சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் பின்னர் மீண்டும் தொடங்கியது.
மத்திய அரசு வழிநடத்துகிறது: இது குறித்து பேசிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கல்யாண் பானர்ஜி, "21ஆம் தேதி கூட்டத்துக்குப் பின்னர் அடுத்த கூட்டம் 24-25 தேதிளில் நடைபெறும் என்று கூறினார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கூட்டத்தை வரும் 30 அல்லது 31ஆம் தேதி நடத்தலாம் என்று கோரிக்கை விடுத்து ஆ.ராசா, தலைவருக்கு கடிதம் எழுதினார். ஆனால், தலைவர் எங்கள் கோரிக்கைக்கு செவி மடுப்பதாக இல்லை. வெள்ளிக்கிழமை அன்று நடக்க இருந்த கூட்டத்தின் அம்சங்கள் குறித்து வியாழக்கிழமை இரவு மாற்றப்பட்டு, அதன் பின்னர் நள்ளிரவுதான் உறுப்பினர்கள் தெரிவிக்கப்பட்டது. தலைவர் ஜெகதாம்பிகா பால், எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவரது வீட்டு வேலைக்காரர்கள் போல நடத்துகிறார். மேலும் டெல்லி தேர்தல் அவசரத்துக்கு இடையே கூட்டத்தை நடத்துகிறார். கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது தலைவருக்கு பல தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அரசிடம் இருந்து உத்தரவுகளைப் பெற்று அதன் அடிப்படையில் அவர் கூட்டத்தில் செயல்படுகிறார்,"என்றார்.
இது குறித்து பேசிய பாஜக உறுப்பினர் அபராஜிதா சாரங்கி, "எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் வெறுப்புணர்வுடன் இடையூறாக செயல்படுகின்றனர். தலைவருக்கு எதிராக தகாத வார்த்தைகளை பேசுகின்றனர்,"என்றார். நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் இறுதி அறிக்கை ஜனவரி 29ஆம் தேதி இறுதி செய்யப்பட உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து மிர்வாஸ் உமர் பரூக் தலைமையிலான குழுவினர் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முன்பு ஆஜராகினர். வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவின் வரைவின் மீது தங்களுடைய கருத்துகளை அவர்கள் குழுவிடம் பகிர்ந்து கொண்டனர்.
அரசின் குறுக்கீடுகள் கூடாது: இதனிடையே வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்தை ஆய்வு செய்யும் கூட்டுக்குழுவில் ஆஜராவதற்கு முன்பு பேசிய மிர்வாஸ், "இந்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். மதத்தின் மீது அரசின் குறுக்கீடுகள் இருக்கக் கூடாது. எங்கள் யோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படும். அதன் படி செயல்படுவார்கள் என்று நம்புகின்றோம். அதிகாரமற்று இருக்கின்றோம் என இஸ்லாமியர்கள் உணர்வது போன்ற முடிவை கூட்டுக்குழு மேற்கொள்ளக் கூடாது,"என்றார்.
வக்ஃபு வாரிய (திருத்த) சட்டம் 2024, மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி அனுப்பப்பட்டது. வக்ஃபு வாரிய சட்டம் 1995ல் திருத்தம் செய்வதை இந்த மசோதா நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக வக்ஃபு வாரிய சொத்துகளை நிர்வகித்தல், முறைப்படுத்துதலில் உள்ள சவால்கள் குறித்து தீர்வு காண விழைகிறது.