மங்களகிரி: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் உள்ளது அம்ருதா பல்கலைக்கழகம். இங்கு தமிழ்நாட்டை சேர்ந்த கே.கே.நவதேவ் என்ற மாணவன் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவன் கடந்த வியாழக்கிழமை அன்று தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, மங்களகிரி காவல் துறையினர் கூறுகையில், தற்கொலை செய்துகொண்ட மாணவன் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். அம்ருதா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். விடுதியில் இந்த மாணவனுடன் தங்கியிருந்த மற்றொரு மாணவன் அவரது தந்தை இறந்துவிட்டதால் விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதனால் நவதேவ் மட்டும் தனியாக இருந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை அன்று காலை விடுதியில் இருந்த மற்ற மாணவர்கள் நவதேவை எழுப்ப சென்றுள்ளனர். அப்போது சத்தம் போட்டு அழைத்தும், கதவை தட்டியும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: தேசத்தின் எண்ணற்ற மைல்கற்களில் தமிழ்நாட்டின் பங்களிப்பும் உள்ளது...ராகுல் காந்தி பெருமிதம்
அப்போது நவதேவ் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது. பின்னர் உடனே மாணவர்கள் விடுதி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து போலீசாரும் விடுதிக்கு வந்து தற்கொலை செய்துகொண்ட மாணவரின் அறையை சோதனை செய்துள்ளனர். அப்போது, போலீசாருக்கு தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், '' தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை'' என எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சக மாணவர்களிடம் விசாரித்த போது, நவதேவுக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லாமல் அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி சேர்த்து விட்டதாகவும், அதுகுறித்து நவதேவ் தங்களிடம் பகிர்ந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும், அறையில் இருந்து எடுக்கப்பட்ட கடிதத்தை எழுதியது அவர்தானா என்றும் விசாரித்து வருவதாக சப்-இன்ஸ்பெக்டர் வெங்கட் கூறினார்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.