ஹூப்பள்ளி: கர்நாடக மாநிலத்தில் உள்ள உனக்கல் பகுதி அச்சவ்வானா காலனியில் டிசம்பர் 22ஆம் தேதி இரவு வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 9 பேரில், எட்டு ஐயப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்து நடந்த அன்று நிஜலிங்கப்பா பேபுரி (58), சஞ்சய் சவதாத்தி (19) ஆகிய இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், இதில் சிக்கிய 12 வயது சிறுவன் விபத்தில் இருந்து மீண்ட நிலையில் அவரது தந்தை பிரகாஷ் பராகேரா (42) டிசம்பர் 31ஆம் தேதி காலை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
இதற்கிடையே, டிசம்பர் 27ஆம் தேதி ராஜூ மூகேரா (16), சாய்நகர் லிங்கராஜ் பிரனூர் (19) ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், டிசம்பர் 29ஆம் தேதி சங்கர் சவான் (30), மஞ்சுநாத் வாக்மோட் (18), தேஜஸ்வர் சதாரே (26) ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களுள் பிரகாஷ் பராகேரா மற்றும் நிஜலிங்கப்பாவைத் தவிர, அனைவரும் திருமணமாகாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த பிரகாஷ் பராகேரா சாய்நகரை சேர்ந்தவர். இவர் இஸ்கான் கோயிலில் சமையல்காரராக பணியாற்றி வந்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக ஐயப்ப சுவாமி மாலை அணிந்து வந்த பிரகாஷ், இரண்டு வருடங்களாக தனது 12 வயது மகனையும் ஐயப்ப சுவாமி மாலை அணிந்து தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
சம்பவ இடத்தில் நடந்தது என்ன?
டிசம்பர் 22ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணியளவில் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது. எரிவாயு கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் பூஜைக்காக ஏற்றிய விளக்கினால் தீப்பிடித்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடி விபத்தில் முதல் தளத்தில் இருந்த ஒன்பது பக்தர்கள் படுகாயமடைந்தனர். தரை தளத்தில் இருந்த 4 பேர் காயமின்றி தப்பியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: போர்வெல் குழிக்குள் இருந்து 10 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு!
இந்த கட்டடத்தில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் பூஜைகள் செய்துவந்ததாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரிடத்தில் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டும் வழக்கம் போல் ஐயப்ப பக்தர்கள் தங்களது சடங்குகளை முடித்து ஐயப்பனுக்கு பூஜைகள் செய்து உறங்கி கொண்டிருந்தனர்.