தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடவோலை கண்ட தமிழ் குடியே..! குடியரசு தின அணிவகுப்பில் கவனம் ஈர்த்த தமிழ்நாடு அலங்கார ஊர்தி! - தேர்தலுக்கு முன்னோடியான குடவோலை

tamil nadu tableaux 2024: டெல்லி குடியரசு தின அணிவகுப்பில், குடவோலை முறையை எடுத்துரைக்கும் வகையில் இடம்பெற்ற தமிழக அலங்கார ஊர்தி அனைவர் கவனத்தையும் பெற்று வருகிறது.

tamil nadu tableaux which participated in the Republic Day Parade are getting everyone attention
குடியரசு தின அணிவகுப்பில் கவனம் ஈர்த்த தமிழ்நாடு அலங்கார ஊர்தி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 6:53 PM IST

Updated : Jan 26, 2024, 7:17 PM IST

குடியரசு தின அணிவகுப்பில் கவனம் ஈர்த்த தமிழ்நாடு அலங்கார ஊர்தி

டெல்லி:நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்றனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பெண்களை மையப்படுத்தி நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், முப்படைகளைச் சேர்ந்த பெண் வீராங்கனைகள் பங்கேற்ற அணிவகுப்பு கம்பீரமாக நடைபெற்றது. மேலும், இந்த குடியரசு தின அணிவகுப்பில் வளர்ச்சியடைந்த பாரதம் (Viksit Bharat) பாரதம் ஜனநாயகத்தின் தாய் (Bharat: Loktantra ki Matruka) என்ற கருப்பொருளை மையப்படுத்தி அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

2024ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பிற்கு 56 மாதிரிகள் அனுமதிக்காக அனுப்பப்பட்ட நிலையில் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாகனங்கள் மற்றும் 9 மத்திய அரசுத் துறையின் வாகனங்கள் என 25 அலங்கார ஊர்திகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், ஹரியானா, மணிப்பூர், மத்திய பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், லடாக், குஜராத், மேகாலயா, ஜார்கண்ட், உத்தர பிரதேசம், தெலங்கானா ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு கடைமைப் பாதையில் நடைபெற்றது.

அதில் தேர்தல்களுக்கு முன்னோடியான தமிழர்களின் குடவோலை முறையைக் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழ்நாடு ஊர்தியின் அணிவகுப்பில் இரு புறமும் சேலை அணிந்த பெண்கள் கையில் பறை இசைத்தபடி நடனமாடினர். அலங்கார ஊர்தியில் “குடவோலை கண்ட தமிழ் குடியே... வாழிய வாழிய வாழியவே...” என தமிழ் பாடலும் பாடிய படி அணிவகுப்பு நடைபெற்றது.

குடவோலை முறை: குடவோலை முறை என்பது பழங்காலத்தில் கிராமங்களில் நிர்வாக உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கப் பின்பற்றப்பட்ட முறை. இந்த குடவோலை முறை 9ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்துள்ளது. இதற்கு ஆதாரமாக முதலாம் பராந்தகன் காலத்துக் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

கிராமத்தில் நிர்வாக உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க மக்கள் ஓலைகளில் பெயர்களை எழுதி ஒரு பானையில் போட்டுவிட்டு, பின்னர் அந்த பானை சபை முன்பு குலுக்கப்பட்டு சிறுவர் அல்லது சிறுமியர் மூலம் ஒரு ஓலை எடுக்கப்பட்டு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த முறையே வாக்குச்சீட்டு முறைக்கு முன்னோடியாகக் கூறப்படுகிறது.

எந்த ஒரு மத அடையாளங்களும் இன்றி மக்களாட்சி முறைக்கு முன்னோடியாகத் தமிழ் மண் விளங்கியதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்த தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் படிங்க: டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம்.. மூவர்ண கொடியை ஏற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு!

Last Updated : Jan 26, 2024, 7:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details