சென்னை: இயக்குநர் மிஷ்கினுக்கு கெட்ட வார்த்தை பேசுவிட்டு மன்னிப்பு கேட்பதே வேலையாக போய்விட்டது என நடிகர் விஷால் கூறியுள்ளார். ‘பாட்டல் ராதா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் தனது பேச்சில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியது மற்றும் இளையராஜாவை ஒருமையில் பேசியது திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாடலாசிரியர் தாமரை, இயக்குநர் லெனின் பாரதி, நடிகர் அருள்தாஸ் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து தான் கெட்ட வார்த்தை பேசியதற்கு இயக்குநர் மிஷ்கின் பேட் கேர்ள் (Bad girl) பட டீசர் வெளியீட்டு விழாவில் மன்னிப்பு கேட்டார். இயக்குநர் மிஷ்கின் அந்த விழாவில் பேசுகையில், “எனக்கு சினிமாவில் கிடைத்த வெற்றி இவ்வாறு பேச வைத்துவிட்டதாக பாடலாசிரியர் தாமரை என்னை விமர்சனம் செய்திருந்தார். 18 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறேன். வெற்றி என் தலைமேல் இருந்திருந்தால் நான் பெரிய நடிகர்களின் படத்தை இயக்கி இருக்க வேண்டும். எனக்கு ரஜினிகாந்திடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. பாடலாசிரியர் தாமரையிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் நடிகர் அருள்தாஸ் என்னை விமர்சித்திருந்தார். எனக்கு அவரையும் பிடிக்கும், என்னை திட்டி அவரும் பிரபலமாகிவிட்டார். அவரிடம் எனது மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது Train படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் பேசியதால் படத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். மேலும் குறிப்பிட்ட ஒரு மனிதரை நான் விமர்சிக்கவில்லை, அந்த எண்ணமும் எனக்கு இல்லை.
விஷாலும் நானும் சண்டைபோடும் போது கூட, ஒரு மோசமான வசை வார்த்தைகள் கூட பேசவில்லை. நான் சொன்ன ஒரே வார்த்தை பொறுக்கி என்பது மட்டும்தான். ஒரு படம் என்னை பாதித்தது, அதன் தாக்கத்தில் என் ஆழ்மனதில் இருந்துதான் பேசினேன். அப்படி பேசியது உங்களை பாதித்துள்ளது. மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 500 பேர் எனக்கு போன் செய்தார்கள். நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை” என மிஷ்கின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்... அநாகரிகமாக பேசியதற்கு விளக்கம் கொடுத்த மிஷ்கின் - MYSSKIN SORRY ABOUT HIS SPEECH
இதனைத்தொடர்ந்து நேற்று சென்னையில் தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு நடிகர் விஷால் பேட்டி அளித்தார். அப்போது மிஷ்கின் விவகாரம் குறித்து கேட்ட போது, “மிஷ்கினுக்கு மன்னிப்பு கேட்பதே வேலையாக போய்விட்டது. மேடை நாகரீகம் என்று உள்ளது. சில பேரின் கேரக்டரை மாற்ற முடியாது. ஆனால் இளையராஜா சாரை அவன், இவன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது, அவர் கடவுளின் குழந்தை, அவரது பாடலை கேட்டு பலர் மன அழுத்ததில் இருந்து விடுபட்டுள்ளனர். இளையராஜாவை ஒருமையில் பேசுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது” என கூறியுள்ளார்.