வகைவகையான உணவுகளை சுவைத்து பார்க்க யாருக்கு தான் ஆசையிருக்காது? குறிப்பாக, மற்ற மாநிலங்களில் ஃபேமஸான உணவுகள் என்றால் சொல்லவா வேண்டும். அந்த வகையில், கேரளா ஸ்பெஷல் கலத்தப்பம் ரெசிபியை ஒரு முறை வீட்டி செய்து சாப்பிட்டு பாருங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாராட்டு மழை பொழிவது நிச்சயம். மிகவும் எளிமையான கலத்தப்பத்தை வீட்டில் எப்படி செய்வது என தெரிந்துகொள்ளலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி - 1 கப்
- ஏலக்காய் - 1
- சீரகம் - 1 டீஸ்பூன்
- வடித்த சாதம் - 2 டீஸ்பூன்
- வெல்லம் - 1 கப்
- உப்பு - 1 சிட்டிகை
- பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
- தேங்காய் துண்டு -1 கப்
கலத்தப்பம் செய்முறை:
- பச்சரிசியை தண்ணீரில் இரண்டு முதல் மூன்று முறை நன்கு கழுவி 5 மணி நேரத்திற்கு ஊற வைத்து விடுங்கள்.
- இப்போது ஊறிய பச்சரிசியில் உள்ள தண்ணீரை வடித்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன், ஏலக்காய், சீரகம், வடித்த சாதம், அரை கப் தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். பின்னர், மீண்டும் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
- அடுத்ததாக, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பொடித்த வெல்லம் மற்றும் அதனுடன், அரை கப் தண்ணீர் சேர்த்து கரைக்கவும். வெல்லம் நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து வடிகட்டி, அரைத்து வைத்த கலவையில் சேர்க்கவும்.
- பாகு நன்கு சூடாக இருக்கும் போதே சேர்த்து கரண்டி அல்லது விஸ்க் பயன்படுத்தி கலந்துவிடவும். அதனுடன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்தால் கலத்தப்பம் செய்வதற்கான மாவு தயார். (கலவை தண்ணீயாக இருக்க வேண்டும்)
- இதற்கிடையில் அடுப்பில் ஒரு ஆப்பம் சட்டியை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி எடுத்து வைக்கவும். இப்போது, அதே சட்டியில் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து ஒரு குழி கரண்டி மாவை சேர்க்கவும். அதன் மேல் தேங்காய் துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- ஒரு புறம் நன்கு வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு 2 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்தால் கலத்தப்பம் ரெடி.
இதையும் படிங்க:
கல்யாண வீட்டு ஸ்டைல் உருளைக்கிழங்கு மசாலா செய்வோமா? 10 நிமிடம் போதும்!