ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டத்தை அடுத்த ரெண்டாடி பகுதியில் நேற்று (ஜன.26) மதியம் சகாதேவன் - தெய்வானை தம்பதி இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு எதிராக ஹெல்மெட் அணிந்திருந்த இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் தெய்வானையின் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், சங்கிலியைப் பறிகொடுத்த தெய்வானை சாலையில் கூச்சலிடவே, அங்கிருந்த அனைவரும் கூடினார். பின் தெய்வானையின் கணவர் சகாதேவன் உடனடியாக சொளிங்கர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்களை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றனர்.
சங்கிலியைப் பறித்த சென்ற நபர்கள் வேலூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் போலீசார் அவர்களை பின் தொடர்ந்தனர். இந்நிலையில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டிருந்த இருவரும் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பைபாஸ் சாலையில் மீண்டும் மற்றொருவரின் சங்கிலியைப் பறிக்க முயன்றதாகத் தெரிகிறது. அப்போது அவர்கள் எதிரே வந்த இருசக்கர வாகனமும் இருவர் வந்த வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஜகபர் அலி கொலை வழக்கு: முதற்கட்டமாக மனைவியிடம் விசாரணையை துவக்கியது சிபிசிஐடி!
இதில் நிலை தடுமாறிய கீழே விழுந்த இருவரையும், பொதுமக்கள் பிடித்து கை, கால்களைக் கட்டி சரமாரியாகத் தாக்க ஆரம்பித்தனர். இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த இரு இளைஞர்களையும் பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது இருவரையும் 36 கிலோ மீட்டர் தூரம் பின் தொடர்ந்து வந்த சோளிங்கர் காவல்துறையினர் வந்தனர். பின்னர் இருவரையும் அங்கிருந்து சோளிங்கர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணையின் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹெல்மெட் அணிந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்கள் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த யஸ்வந்த் (23) மற்றும் ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (24) என்பது தெரிய வந்ததது. மேலும் இவர்கள் இருவரும் மீதும் ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் சங்கிலி பறிப்பு, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், புதிய சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.