வேலூர்: தமிழ்நாட்டில் மணல், கம்பி, சல்லி போன்றவற்றின் விலை உயர்வால் கட்டுமான பணிகள் பாதிப்படைந்துள்ளது. எனவே இவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், நலவாரியத்தில் உள்ள ரூ.7 ஆயிரம் கோடி தொழிலாளர் நலனுக்காக பயன்படவில்லை, அதனை உடனடியாக பயன்படுத்த வேண்டும் என அகில இந்திய கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் ஆர்.டி.பழனி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் அகில இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நிறுவனத் தலைவர் ஆர்.டி.பழனி தலைமையில் நேற்று (ஜன.26) நடைபெற்றது. அதில் நிர்வாகிகள் உமாசங்கர், சுரேஷ், சாய்குமார், கார்த்திகேயன், சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.டி.பழனி, "நலவாரியத்தின் மூலம் கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த நல வாரியத்தில் 20 சதவிகிதம் பேர் மட்டுமே அமைப்புசாரா தொழிலாளர்கள் பெயர் பதிவு செய்துள்ளனர். அதிக தொழிலாளர்களை நலவாரியத்தில் இணைக்க வேண்டும்.
திருமண நிதி, கல்வி உதவித்தொகை, இறப்பு மரணம், விபத்து மரணம் போன்றவற்றை உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் மணல், சல்லி, கம்பி, சிமெண்ட் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த கடுமையான விலை உயர்வால் பொதுமக்கள் வீடுகளைக் கட்ட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: "கடந்த 4 ஆண்டுகளில் மதுரையில் மட்டும் இத்தனை மீட்டர் பெட்டிகள் பழுதா?" - ஆர்டிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
ஏரி குளங்களில் களிமண் எடுக்க மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகையால், உடனடியாக அவர்களுக்கு அனுமதியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் 15 ஆண்டுகளாக வைத்தும் நிறைவேற்றப்படவில்லை. அதனை நிறைவேற்ற வேண்டும். கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் ரூ.7 ஆயிரம் கோடி பணம் இருந்தும் அது தொழிலாளர்கள் நலனுக்காக பயன்படுத்தப்படவில்லை.
அதனை உடனடியாக தொழிலாளர்களின் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு தனி இலாக்கா ஏற்படுத்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கென தனி கூட்டுறவு வங்கி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக" தெரிவித்தார்.