திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை நள்ளிரவில் கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைக்கு தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் சுற்றுலாவுக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில், ஏலகிரி மலை முத்தானூர் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பனின் மனைவி காந்தா (73) அவருடைய வீட்டில் தனியாக வசித்து வந்தார். மூதாட்டிக்கு நான்கு பிள்ளைகள் இருந்த நிலையில் ஒருவர் இறந்து விட்டார். மூன்று பிள்ளைகளும் ஏலகிரி மலை அத்தனாவூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காந்தா நேற்றிரவு (பிப்.4) வழக்கம் போல அவரது வீட்டில் உறங்கியுள்ளார். இதனை அடுத்து காந்தாவின் பேரன் ஜெகன் பாட்டியை பார்ப்பதற்கு காலை சென்றுள்ளார். அப்போது காந்தா இறந்த நிலையில் கிடந்துள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகன் வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏலகிரி மலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: வால்பாறை அருகே யானை தாக்கியதில் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழப்பு!
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மூதாட்டி காந்தா தனிமையில் இருப்பதை நோட்டம் பார்த்து வீட்டில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் காந்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் காந்தா அணிந்திருந்த 2 சவரன் தங்க நகை, காலில் அணிந்திருந்த வெள்ளி காப்பு மற்றும் வீட்டில் இருந்த எல்இடி டிவி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
மேலும், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் தேவராணி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆகியோர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அத்துடன், திருவண்ணாமலையிலிருந்து மோப்ப நாய் வீராவை வரவழைத்து தடயங்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது. கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மூதாட்டியை கொலை செய்தது யார் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.
ஏலகிரி மலையில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.