சென்னை: சென்னையில் இருந்து ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டுக்கு நேரடி விமான சேவைகள் ஏற்கனவே இண்டிகோ, ஏர் இந்தியா, ஓமன் ஏர்லைன்ஸ், சலாம் ஏர் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. ஆனால் ஓமன் சுற்றுலா தலமாக இருப்பதாலும், மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து லண்டன், மாஸ்கோ நகர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இணைப்பு விமான நிலையமாகவும் இருப்பதால் மஸ்கட் நகருக்கு சென்னையில் இருந்து பயணிகள் அதிக அளவில் செல்கின்றனர்.
இதையடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சென்னையில் இருந்து மஸ்கட்டிற்கு நேரடி விமான சேவையை புதிதாக தொடங்கியுள்ளது. வாரத்தில் 2 நாட்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் இந்த விமானம் இந்திய நேரப்படி மாலை 5.40 மணிக்கு மஸ்கட் நகரை சென்றடையும். அதன்பின்பு இந்திய நேரப்படி மாலை 6.40 மணிக்கு மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும்.
பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால் மஸ்கட்டிற்கு கூடுதலாக வாரத்தில் 2 நாட்கள் நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகளின் வரவேற்பை பொறுத்து இந்த விமானம் தினசரி விமான சேவையாக இயக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.