டெல்லி:பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சிஐஎஸ்எப் துணை உதவி காவல் ஆய்வாளரை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன ஊழியர் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெண் ஊழியரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அனுராதா ராணி, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உணவு விநியோக பிரிவின் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். ஜெய்ப்பூர் விமான நிலையத்தின் உள் நுழைவு வாயிலில் உணவு விநியோக பணிகளுக்காக பெண் சென்று உள்ளார். அப்போது அவரை மறித்த துணை உதவி காவல் ஆய்வாளர் கிரிராஜ் பிரசாத், பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர் அனுராதா ராணியிடம் நுழைவு வாயிலை கடந்து செல்வதற்கு தேவையான அனுமதிச் சீட்டு இல்லை எனக் கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பெண் ஊழியர், துணை உதவி காவல் ஆய்வாளர் கிரிராஜ் பிரசாத்தின் கன்னத்தில் பளார் என அறைந்தாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அனுராதா ராணியின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து பேசிய மூத்த சிஐஎஸ்எப் அதிகாரி, ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர் அனுராதா ராணி உள்பட எந்த விமான நிறுவன ஊழியரும் பாதுகாப்பு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்.